சி.எஸ்.ஐ., டயோசீசன் கூட்டத்தில் குழப்பம் ! உறுப்பினர்கள் சேர்களை வீசி ரகளை!

பதிவு செய்த நாள்

14
நவம்பர் 2015
01:31

திருநெல்வேலி: நெல்லை திருமண்டல சி.எஸ்.., டயோசீசன் பெருமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் குருமார்கள் ஓய்வு வயது 67 ஆக உயர்த்தப்பட்டது. திருமண்டல மூலச்சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில உறுப்பினர்கள் சேர்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர்.

நெல்லை திருமண்டல சி.எஸ்.., டயோசீசன் அலுவலகத்தில் பெருமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

நேற்று நடந்தது. காலை 7 மணி முதல் பெருமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்திற்கு வரத்துவங்கினர். அவர்கள் தீவிர சோதனைக்குப் பின், அலுவலகத்திற்குள் அனுப்பப்பட்டனர். காலை 10 மணிக்கு கூட்டம் துவங்கியது.

பிஷப் கிறிஸ்துதாஸ் தலைமை வகித்தார். திருமண்டல லே செயலாளர் குணசிங் செல்லத்துரை, துணைத்தலைவர் வசந்தக்குமார், குருத்துவக்காரியதரிசி பர்ணபாஸ், பொருளாளர் தேவதாஸ், சேகர குருமார்கள், பெருமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். முதலில் சிறப்பு ஜெபம் நடந்தது.

பின்னர் பிஷப் கிறிஸ்துதாஸ் தீர்மானங்களை வாசிக்க முயன்றார். இதற்கு வேதநாயகம் அணி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முறையாக ஓட்டெடுப்பு நடத்தி தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். உறுப்பினர்களுக்கு ஆண்டுக்காணிக்கை உயர்வுத்தொகையை குறைக்க பலரும் வலியுறுத்தினர்.

சிலர் பிஷப்பிடம் இருந்து மைக்கைப் பறிக்க முயன்றனர். அப்போது கூச்சல், குழப்பம் ஏற்பட்டு, கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. டயோசீசன், சினாட் அறிவுறுத்தியபடி அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படுவதாகக் கூறி விட்டு, பிஷப் கிறிஸ்துதாஸ் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். உடனே சிலர் சேர்களை தூக்கி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். சில நிமிடங்களில் கூட்டம் நிறைவு பெற்றது.

சபை உறுப்பினர்களுக்கான வருடாந்திர சங்கக் காணிக்கையை 100 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்துவது, குருமார்கள் ஓய்வு வயதை 65 வயதில் இருந்து 67 வயதாக உயர்த்துவது, சபை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வதற்கு குருமார்களுக்கு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட திருமண்டல மூலச்சட்டத் திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 288 பெருமன்ற உறுப்பினர்களில் 185 பேர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

உதவி கமிஷனர்கள் மாதவன், நாச்சிமுத்து தலைமையில் போலீசார், ஆயுதப்படை போலீசார் கூட்டம் நடந்த அலுவலகத்திற்கு வெளியில் குவிக்கப்பட்டிருந்தனர்.