பாளை.யில் காருண்யா பல்கலை., வேந்தர் இல்ல திருமண விழா

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019 00:24


திருநெல்வேலி:

 இயேசு அழைக்கிறார் நிறுவனரும், காருண்யா நிகர்நிலை பல்கலை., வேந்தருமான பால் தினகரன் இல்ல திருமண விழா பாளை.யில் நடந்தது. விழாவில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். மணமக்கள் கஜா புயலால் பாதித்தவர் களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினர்.

இயேசுஅழைக்கிறார், சீஷா தொண்டு நிறுவன நிறுவனரும், காருண்யா நிகர்நிலை பல்கலை., வேந்தருமான பால் தினகரன் – இவாஞ்சலின் பால் தினகரன் தம்பதியரின் மூத்த மகன் சாமுவேல் பால் தினகரனுக்கும், நெல்லை பிரபல டாக்டர்கள் ராஜ்குமார் ஞானமுத்து –சகுந்தலா தம்பதியரின் மகள் டாக்டர். ஷில்பா ஷேரனிற்கும் நேற்று மாலை பாளை., கதீட்ரல் சர்ச்சில் திருமணம் நடந்தது. திருமணத்தை பேராயர் நடத்தி வைத்தார். தொடர்ந்து மணமக்களை பேராயர்கள், போதகர்கள் வாழ்த்தி ஆசி வழங்கினர்.

இதனையடுத்து பாளை.யில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மணமக்கள் கேக் வெட்டி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.  கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட மக்களுக்கு சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் 100 வீடுகள் கட்டி கொடுக்கும் நிவாரணப் பணிகளை அறிந்த மணமக்கள் ரூ.ஒரு லட்சம் நன்கொடை வழங்கினர்.

நிகழ்ச்சியில் மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், எம்.பி., விஜிலா சத்தியானந்த்,  ஸ்டெல்லா தினகரன், இவாஞ்சலின் பால் தினகரன், ஷேரன் பால் தினகரன், ஸ்வீட்டி பால் தினகரன், வட இந்திய திருச்சபையின் பிரதம பேராயர் பி.சி., சிங், ராஞ்சி திருமண்டல பேராயர் பாஸ்கே, குஜராத் திருமண்டல பேராயர் சில்வான்ஸ் கிறிஸ்டியன், தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர் தாமஸ் கே. உம்மன், துணை பிரதம பேராயர் பிரசாத் ராவ், மதுரை திருமண்டல பேராயர் ஜோசப், துாத்துக்குடி, நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம், திருச்சி திருமண்டல பேராயர் சந்திரசேகரன், கொல்லம் திருமண்டல பேராயர் உம்மன் ஜார்ஜ், சென்னை திருமண்டல முன்னாள் பேராயர் தேவசகாயம்,  சீஷா, காருண்யா பல்கலை., அதிகாரிகள், கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பிரமுகர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். 

 ஏற்பாடுகளை மணமக்கள் குடும்பத்தினர் செய்திருந்தனர்.