செங்கல் சிவ பார்வதி கோயிலில் 111 அடி உயர சிவலிங்கம் :இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது

பதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2019 23:20


களியக்காவிளை:

களியக்காவிளை அருகே கேரளாவில் செங்கல் பகுதியில் அமைந்துள்ள சிவ பார்வதி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 111 அடி உயரமுள்ள சிவலிங்கம் இந்திய சாதனை புத்தகத்தில் (இந்திய புக் ஆப் ரெக்கார்டு ) இடம்பெற்றது. இதற்கான சான்றிதழ் வழங்கும் விழா கோயில் வளாகத்தில் நடந்தது.

சிவலிங்கத்தின் உள்பகுதி குகை வடிவில் 8 நிலைகளாக (8 மாடி) அமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்பகுதி நடைபாதையின் ஓரங்களில் சித்தர்களின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் தியானம் செய்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2012ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி துவங்கிய சிவலிங்கம் அமைக்கும் பணி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த சிவலிங்கம் இந்திய அளவில் மிக உயரமான சிவலிங்கம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழை இந்திய புக் ஆப் ரெக்கார்டு அமைப்பின் நிர்வாகி சாகுல் அமீது வழங்கினார். இதை கோயில் மடாதிபதி மகேஸ்வரானந்தஜி சுவாமிகள் மற்றும் பா.ஜ., எம்.எல்.ஏ. ராஜகோபால் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்திய புக் ஆப் ரெக்கார்டு அமைப்பின் நிர்வாகி சாகுல் அமீது செய்தியாளர்களிடம் கூறும்போது, இக்கோயிலில் உள்ள சிவலிங்கம் 111.2 அடி உயரம் கொண்டது. நாட்டில் வேறு பல இடங்களில் உயரமான சிவன் சிலை உள்ளது. ஆனால் இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள சிவலிங்கமே இந்திய அளவில் மிக உயரமான சிவலிங்கமாக உள்ளது என்றார். நிகழ்ச்சியில் நெய்யாற்றின்கரை தாசில்தார் மோகன்குமார் மற்றும் கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கோயிலில் நாட்டிலுள்ள பிரசித்திபெற்ற 12 ஜோதிர்லிங்கங்களும், 32 வடிவ கணபதி விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.