சென்னையில் ரேசன் கடைகளில் போலீஸ் கமிஷனர் ஆய்வு

பதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2019 23:14


சென்னை:

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்படுவதையொட்டி பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எற்பட்டு விடாதபடி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை கமிஷனர் விஸ்வநாதன் பார்வையிட்டார்.

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும், பொங்கல் பரிசாக ரூ, 1000 வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரூ. ஆயிரம் வழங்க வேண்டும் என கோர்ட் தீர்ப்பளித்தது. இதனால் சர்க்கரை கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆங்காங்கே ரேசன் கடைகளில், வாக்குவாதம் தகராறில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கு சீர்கெடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வடசென்னை பகுதிகளில் பொங்கல் பரிசு வழங்கும், ரேசன் கடைகளை சென்னை போலீஸ் கமிஷனர்  ஏகே. விஸ்வநாதன் ஆய்வு செய்தார். இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த விஸ்வநாதன், ‘‘பொங்கல் பரிசு  வழங்குவது தொடர்பாக,  நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு ரேசன் கடைகளில் அவை முறையாக வழங்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டோம்.   அனைத்து, ரேசன் கடைகளுக்கும்,  அந்தந்த காவல் நிலைய போலீசாருக்கு,  போதிய ஒழுங்கு முறைக்கான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு வழங்கும் ரேசன் கடைகளில், முறையான பாதுகாப்பும், சட்டம் ஒழுங்கும் கடைபிடிக்கபப்டும் என்றார்.