திருச்செந்துார் கோயிலில் தரிசன கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நாள் : 05 டிசம்பர் 2018 00:03


திருச்செந்துார்:

திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் உயர்த்தப்பட்டுள்ள தரிசனம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தன்ஜி தெரிவித்தார்.

 திருச்செந்துார் காஞ்சி ஸ்ரீ சங்கரா பீடாதிபதி மடத்தில் இந்து முன்னணி முழுநேர ஊழியர்கள் செயற்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தன்ஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

 தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையினான கட்சியின் சார்பில் குறிப்பிட்ட மதத்தினருக்கு 12 விதமான சலுகைகள் வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளனர். இது மதநல்லிணக்கத்திற்கு எதிரானது. இதனால் மதப்பிரச்சனைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

 எனவே அக்கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 12 ஆண்டுகளாக அயோத்தில் ராமர் கோயில் கட்ட பல்வேறு பேராட்டங்கள் நடத்திவருகிறோம். தற்போதைய பாரதிய ஜனதா அரசு இதற்கு தீர்வு காணும் விதமாக சட்டம் இயற்ற வேண்டும். இதனை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

 சபரிமலையின் புனித காக்க 50 வயதிற்கு மேல்தான் தரிசனத்திற்கு வருவோம் என்று 1600 கோயில்களில் பெண்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர். இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்து வரும் கேரள அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.. இந்துக்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இதையடுத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கோயிலில் ஒரு லட்சம் பேர் தங்கள் குடும்பத்தினர்களுடன் சேர்ந்து பூஜை செய்து வழிபாடு செய்யும் மகாலெட்சுமி பூஜை செய்ய உள்ளோம். இந்த வழிபாடு 3 நாட்கள் நடைபெறும். இதில் 1008 பசுக்களை வைத்து கோபூஜை, 108 குதிரைகளை வைத்து அஸ்வபூஜை, கஜபூஜை மற்றும் பல்வேறு யாகங்கள் நடக்கவுள்ளன.

 அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதை வரவேற்கிறோம். திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தரிசன கட்டணம் உட்பட பல்வேறு கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தரிசன கட்டணமே கூடாது என்று வலியுறுத்திவரும் இந்து முன்னணி இதனை வன்மையாக கண்டிக்கிறது.

 கேரளா போல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் உள்ள தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். தரிசனக்கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு பக்தன்ஜி கூறினார்.

 செய்தியாளர் சந்திப்பின் போது மாநில துணை தலைவர் ஜெயக்குமார், நெல்லை கோட்ட செயலாளர் சக்திவேலன், ஒன்றிய தலைவர் ஜெயசிங், நகர பொதுச்செயலாளர் முத்துராஜ், உட்பட பலர் உடனிருந்தனர்.