போலி பாஸ்போர்ட்டில் சிறுவர்கள் வெளிநாட்டுக்கு கடத்தல்:மும்பை பெண் கைது

பதிவு செய்த நாள் : 04 டிசம்பர் 2018 23:30


சென்னை:

போலி பாஸ்போர்ட்டில் சிறுவர்களை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்த மும்பையைச் சேர்ந்த பெண்ணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதன் பின்னணியில் மிகப்பெரிய நெட்ஒர்க் இருப்பதால் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்துகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குடியுரிமை அதிகாரி ஏகே சிங் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். ‘‘கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதியன்று சிறுவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றனர். மீண்டும் அந்த பாஸ்போர்ட்டை இந்தியாவுக்கு கொண்டு வந்து ஆள்மாறாட்டம் செய்து வேறு பல சிறுவர்களை மீண்டும் வௌிநாடுகளுக்கு போலி பாஸ்போர்ட்டில் அழைத்துச் செல்கின்றனர். இதனை ஒரு மோசடி கும்பல் வழக்கமாக செய்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தும்படி போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் சென்னை மத்தியக்குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி ஏப்ரல் 11ம் தேதி 7 பேர் கும்பலை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் காவலராக பணியாற்றிய மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த தஞ்சாவூர் திருவிடைமருதூரை சேர்ந்த கிரிதர் பிரசாத் (வயது 40) மற்றும் துப்புரவு பணியாளர் நங்கநல்லுாரைச் சேர்ந்த மணிவண்ணன் (41) ஆகிய இருவரையும் கடந்த ஏப்ரல் மாதம் போலீசார் கைது செய்தனர். கடந்த 18 ஆண்டுகளாக துப்புரவு பணியாளராக பணியாற்றிய மணிவண்ணனும், காவலர் கிரிதர் பிரசாத்தும் சிறுவர்களை போலி பாஸ்போர்ட்டில் வௌிநாட்டுக்கு கடத்திய நபர்களுக்கு உடந்தையாக இருந்து செயல்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மும்பையைச் சேர்ந்த ஹரு மஞ்சு தத்தா (55) என்ற பெண் மூளையாக இருந்து செயல்பட்டதை கண்டுபிடித்தனர். கள்ளத்தோணியில் வௌிநாடுகளுக்கு செல்ல முயல்பவர்கள், மஞ்சுவை அணுகினால் அவர் விமானத்தில் பக்காவாக அழைத்துச் செல்வாராம். மஞ்சு தத்தாவுக்கு மும்பையில் பல ஏஜெண்டுகள் ரகசியமாக இருந்து செயல்பட்டு வந்துள்ளனர். இந்த வகையில் மஞ்சு தத்தா சிறுவர்கள் பலரை போலி பாஸ்போர்ட்டில் வௌிநாட்டுக்கு பத்திரமாக அழைத்துச் சென்று விடுவார் போன்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து மஞ்சு தத்தாவை கைது செய்வதற்காக போலீசார் தேடிவந்த நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தலைமறைவாகிவிட்டார். அவர் வெளிநாடு தப்பிச்சென்று விடாமல் தடுக்கும் நோக்கில் அது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீசு வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் மஞ்சு தத்தா வெளிநாட்டில் இருந்து மும்பைக்கு வருவதாக, மும்பை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அது தொடர்பாக லுக்அவுட் நோட்டீஸ் அடிப்படையில் சென்னை போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். மும்பை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மஞ்சு தத்தா வந்து இறங்கியவுடன் மும்பை போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். சென்னையில் இருந்து மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணா தலைமையில் சென்ற தனிப்படை போலீசார் மும்பை கோர்ட்டில் டிரான்சிட் வாரண்டு பெற்று நேற்று முன்தினம் மஞ்சு தத்தாவை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர் ஆலந்துார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 11-ம்தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். தொடர்ந்து  மஞ்சு தத்தாவை போலிஸ் காவலில் எடுத்து விசாரணை செய்து, கடத்தப்பட்ட சிறுவர்களை மீட்க  சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இமிகிரேஷன் அதிகாரிகளும் உடந்தை!

கடந்த ஏப்ரல் மாதம் சிறுவன் ஒருவனை போலி விசா, போலி பாஸ்போர்ட்  மூலம் மஞ்சு தத்தா வௌிநாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். முறையான ஆவணங்கள் இல்லாமல் போலி பாஸ்போர்ட் மூலம் இது போன்று 7 சிறுவர்களை அமெரிக்கா, மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு மஞ்சு அழைத்து சென்றுள்ளார். இவ்வாறு முறைகேடாக வெளிநாடு சென்ற காரணத்தால் ஏற்கனவே லண்டன் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் மஞ்சு தத்தாவை கைது செய்துள்ளனர்.

குறிப்பாக பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடு செல்லும் நபர்கள் முறையாக செல்கின்றனரா? இதற்கு முன்பு வெளிநாடு முறையாக சென்று வந்துள்ளனரா? என குடியுரிமை அதிகாரிகள் சோதிக்க வேண்டும். ஆனால் மஞ்சு தத்தா போலி விசா மூலம் சிறுவர்களை கடத்துபவர் என தெரிந்தும், விமான நிலையத்தில் பணிபுரிந்த சில அதிகாரிகள் அவரை வெளிநாடு செல்ல அனுமதித்துள்ளனர். மேலும் மஞ்சு தத்தா சென்னை மட்டுமின்றி, மும்பை, டில்லி விமான நிலையங்களிலும் இமிகிரேஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சிறுவர்களை கடத்தியதும் விசாரணையில் தெரிந்தது.

 மும்பையிலும் மஞ்சு தத்தா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிறுவர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும் மஞ்சு தத்தா அங்கு அவர்களை அகதிகள் என கூறி முகாம்களில் தங்க வைத்து விட்டு வந்து விடுவாராம். அதற்காக சிறுவர்களின் உறவினர்களிடம் மஞ்சு தத்தா ஒரு தொகையை பெற்றுக் கொள்வாராம். அகதிகள் போர்வையில் சிறுவர்கள் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வௌிநாடுகளில் தங்கி வேலை பார்க்கின்றனர். 15 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த நாட்டு குடியுரிமை பெற்று விடுகின்றனர். இதற்காக மஞ்சு தத்தாவுக்கு வௌிநாட்டில் உள்ள சில ஏஜெண்டுகள் பணம் கொடுக்கின்றனர் போன்ற தகவல்கள் வெ ளியாகியுள்ளன. அவரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினால் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என தெரிகிறது.