பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமரா பொருத்திய உரிமையாளர் கைது

பதிவு செய்த நாள் : 04 டிசம்பர் 2018 23:29


சென்னை:

சென்னை ஆதம்பாக்கத்தில் பெண்கள் விடுதியில் படுக்கையறை, குளியலறையில் ரகசிய கேமரா பொருத்திய உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். செல்போன் செயலியை வைத்து கேமரா இருப்பதை கண்டு பிடித்த அங்கு ஐடி பெண்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இது பற்றி போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:–

சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்காநகர் முதல் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு திருச்சியைச் சேர்ந்த சஞ்சீவ் (வயது 45) என்பவர் அறைகளை வாடகைக்கு எடுத்து பெண்கள் விடுதி நடத்தி வந்தார். இங்கு சொகுசு அறைகள், உடற்பயிற்சிக் கூடம் என ஐடெக் பாணியில் அனைத்து வசதிகளும் உள்ளன. இதனால் அங்கு ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் பெண் என்ஜினீயர்கள் பேயிங் கெஸ்ட் என்ற பெயரில் 10க்கும் மேற்பட்டவர்கள் தங்கியிருந்தனர். இந்நிலையில் விடுதியில் அடிக்கடி சர்வீஸ் என்ற பெயரில் குறிப்பிட்ட சில பணியாளர்கள் அடிக்கடி வருவதும் போவதுமாக இருந்துள்ளனர். அவர்கள் குறிப்பாக எலெக்ட்ரிக் பணிகளை மட்டும் செய்துள்ளனர். இது அங்கு தங்கியிருந்த பெண்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் உஷாரான பெண்கள் தங்களது அறைகளில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருக்கலாமோ என்று சந்தேகப்பட்டனர். இதனையடுத்து தங்களது ஆண்ட்ராய்டு செல்போன் மூலம் அதனை கண்டுபிடிக்க முயற்சி செய்தனர். இது குறித்து ஆய்வில் இறங்கிய ஐடி பெண்கள் தங்களது மொபைலில் உள்ள செல்போன் செயலி (Hidden Camera Detector App) மூலம் விடுதி அறையில் ரகசிய கேமராக்கள் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

விடுதிக்குள் கழிவறை, படுக்கையறை, துணி மாட்டும் கைப்பிடி, மின்சார சுவிட்ச் போர்டு உள்ளிட்ட இடங்களில் கண்களுக்கு தெரியாத சிறிய அளவிலான ரகசிய கேமராக்களை சஞ்சீவ் பொருத்தியிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் அது குறித்து ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பரங்கிமலை துணைக்கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையில் ஆதம்பாக்கம் போலீசார் சஞ்சீவை பிடித்து விசாரணை நடத்தினர். அவரை விடுதிக்கு நேரில் அழைத்துச் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது பெண்கள் தங்கும் அறைகளில் பொருத்தப்பட்டிருந்த சிறிய வகை கேமராக்களை பறிமுதல் செய்தனர். மேலும் கேமராக்களை செயல்படுத்த உதவும் எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் 16 செல்போன்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். மேலும் சஞ்சீவின் அறையில் ஏராளமான போலி ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்பட பல போலி ஆவணங்களை கைப்பற்றினர். இதனையடுத்து சஞ்சீவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் சஞ்சீவ் மீது பல பெயர்களில் போலி ஆவணங்கள் தயாரித்து ஆள்மாறாட்ட மோசடி செய்ததாக வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், ‘‘சஞ்சீவ் நடத்திய விடுதியில் மூன்று சொகுசு அறைகள் உள்ளன. அதில் 7 பெண்கள் தங்கியுள்ளனர். அவர்கள்தான் தங்களது குளியலறைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது குறித்து எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். குளியலறை, உடைமாற்றும் அறை ஆகியவற்றில் சஞ்சீவ் சிறிய அளவிலான ரகசிய கேமராக்களை பொருத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார். விடுதியில் தங்கியிருந்த பெண்களின் ஆபாச வீடியோக்கள் அந்த கேமராவில் பதிவாகியிருக்க வாய்ப்புள்ளது. நாங்கள் கைப்பற்றிய கேமராவில் அது போன்ற பட வீடியோக்கள் எதுவும் இல்லை. விடுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தனர்.

‘‘சமூகவலைதளத்தில் சஞ்சீவ் வெளியிட்ட விளம்பரத்தைப் பார்த்து இந்த விடுதியை நேரில் வந்து பார்த்தோம். எங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் அங்கு இருந்தன. சென்னையில்  இந்த வசதியில் விடுதிகள் கிடைப்பது கடினம். இதனால், நம்பிதான் அங்கு தங்கினோம். ஆனால், விடுதிக்குள் ரகசிய கேமராக்களைப் பொருத்தியது அதிர்ச்சியளிக்கிறது. சஞ்சீவ்விடம் முழுமையாக விசாரணை நடத்தி அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பெண்கள் போலீசாரிடம் அளித்த புகாரில் கூறியுள்ளனர். ரகசிய கேமரா விவகாரத்தில் சஞ்சீவ் கைதான பின்னர், அந்த விடுதியில் தங்கியிருந்த பெண்கள் அங்கிருந்து காலி செய்து வௌியே சென்று விட்டனர். இதனால் விடுதிக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. ரகசிய கேமராவில் பதிவான வீடியோக்களை சஞ்சீவ் யாருக்காவது அனுப்பியுள்ளாரா? அல்லது அவற்றை காட்டி பெண்களை மிரட்டி பணம் பறித்துள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தரப்பிலிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை என்றும் போலீஸார் சார்பில் தெரிவித்தனர்.  தாம்பரத்தில் குடும்பத்துடன் குடியிருந்து வரும் சஞ்சீவ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசுவாராம். இதனால் அங்கு தங்க வரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் சகஜமாகப் பேசி அவர்களை கவர்ந்து விடுவாராம்.  பார்ப்பதற்கு எப்போதும் சினிமா ஸ்டார் போல ஸ்டைலாக பந்தாவாகவே வலம் வருவாராம் சஞ்சீவ்.