கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா

பதிவு செய்த நாள் : 03 டிசம்பர் 2018 23:32


நாகர்கோவில்:

கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா திருப்பலியில்  ஏராளமனவர்கள் கலந்து கொண்டனர்.

கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த நவம்பர் மாதம் 24 ம் தேதி மாலையில் கோட்டாறு மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ் தலைமையில் திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. காவல் துறையினர் சிறப்பித்தனர். 2 ம் நாள் விழாவில் காலையில் முதல் திருவிருந்து நடந்தது. விழா நாட்களில் காலையில் திருப்பலிகளும், மாலையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடந்தது. 8 ம் நாள் விழாவில் நடந்த ஆடம்பர கூட்டுத் திருப்பலி ஓய்வு பெற்ற கோட்டாறு பிஷப் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் நடந்தது. இரவில்  தேர்பவனி நடந்தது. 9 ம் திருவிழாவில் மாலையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் கோட்டாறு மறைமாவட்ட பிஷப் நசரேன் சூசை தலைமையில் நடந்தது. இரவில் தேர்பவனியும் நடந்தது. 10 ம் திருவிழாவான நேற்று காலையில் புனித சவேரியார் பெருவிழா திருப்பலி கோட்டாறு மறைமாவட்ட பிஷப் நசரேன் சூசை தலைமையில் நடந்தது. இதில் மாமறைமாவட்ட முதன்மை பணியாளர் கிலேரியஸ், செயலாளர் இம்மானுவேல், பொருளாளர் ஆலாசியஸ், மறைமாவட்டத்தின் 60க்கும் மேற்பட்ட அருட்பணியாளர்கள், 100 க்கும் மேற்பட்ட அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர். மலையாள திருப்பலியை திருவனந்தபுரம் உயர் மறைமாவட்டம் நீதித்துறை  பிஷப் பதில் குறு கிளாடின் அலெக்ஸ் தலைமையில் நடந்தது.

தேர்பவனி

நேற்று நடந்த தேர்பவனியில் பக்தர்கள் நேர்ச்சைகளை செலுத்தினர். உப்பு, நல்லமிளகு,  பூ மாலைகளோடு காணிக்கை செலுத்தினர். ஆலயத்தில் இருந்து துவங்கிய தேர்பவனியானது பரதர் தெரு வழியாக கம்பளம், காசுகடை பஜார், ரயில்வே ஜங்ஷன் வழியாக ஆலயம் வந்தது. தேர்பவனியின் போது மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இரவில் தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. 

போக்குவரத்து மாற்றம்

9 ம் திருவிழா மதியத்தில் இருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.   நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்டில் இருந்து கோட்டார் போலீஸ் ஸ்டேஷன் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும்  மாற்றுப்பாதை வழியாக இயக்கப்பட்டது. கன்னியாகுமரியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பீச் ரோடு சென்று அங்கிருந்து ஏ.ஆர்.கேம்ப் வழியாக ராமன்புதூர், செட்டிகுளம் வழி நாகர்கோவில் வந்தது. இந்த போக்குவரத்து மாற்றம் 10 ம் திருவிழா முடியும் வரை இருந்தது. கடந்த இரு தினங்களாக சவேரியார் ஆலயத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் பெருவிழா திருப்பலி, தேர்பவனிகளில் கலந்து கொண்டனர்.

உள்ளூர் விடுமுறை

புனித சவேரியார் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே உள்ளூர் விடுமுறை அறிவித்திருந்தார். 9 ம் திருவிழா ஞாயிற்று கிழமை வந்ததாலும், 10 ம் திருவிழாவுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டதாலும் பக்தர்களுக்கு இரு நாட்களிலும்  திருவிழா நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடிந்தது.

போலீஸ் பாதுகாப்பு

மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநாத் உத்தரவின்படி ஆலயம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்தை ஒழுங்கு படுத்த கூடுதலாக போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. முக்கிய சந்திப்புகளில் பேரிகார்டு மூலம் தடுப்பு அமைக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. வடசேரியில் இருந்து வேப்பமூடு, அண்ணா பஸ் ஸ்டாண்ட் வரை வாகனங்கள் மெதுவாகவே இரு நாட்களாக  செல்ல வேண்டிய நிலை இருந்தது.