நாகர்கோவில் நகராட்சியின் கட்டுமான பணி: பகுதிவாசியினர் எதிர்ப்பால் பரபரப்பு

பதிவு செய்த நாள் : 01 டிசம்பர் 2018 00:47


நாகர்கோவில்:

வட்டவிளையில் நாகர்கோவில் நகராட்சி இடத்தில் உர கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில் அருகே வட்டவிளை பகுதியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதற்கு அருகில்  நாகர்கோவில் நகராட்சி இடம் உள்ளது. இந்த இடத்தை சுற்றி  உள்ள வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். நாகர்கோவில் நகராட்சி சார்பில் குப்பைகளை உரமாக தயாரிக்க கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டும் பணி நடந்து வருவதை பார்த்த வட்டவிளை ஊர் தலைவர் சிவ கிருஷ்ணன் தலைமையில், செயலாளர் சிவலிங்கபெருமாள், பொருளாளர் சண்முகவேல், துணைத்தலைவர் ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் கதிரேசன், நாகராஜன், ராஜன் மற்றும் பெண்கள்  உட்பட  சுமார் 500 பேர்கள் உரம் தயாரிக்க கட்டுமான பணிகள் நடந்த இடத்தில்  குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பெண்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே இடத்தில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் நீடித்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை நிரப்ப துவங்கியது இரவு வரை நீடித்தது.