அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு: குற்றாலத்தில் குளிக்க தடை

பதிவு செய்த நாள் : 04 நவம்பர் 2018 01:30


குற்றாலம்:

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நவ. 1ம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை தமிழகம் முழுவதும் துவங்கியதையடுத்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி அடிவாரத்தில் அமைந்துள்ள தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் கனமழை கடந்த 3 நாட்களாக பெய்து வருகிறது. பகல் நேரங்களில் அவ்வப்போது மழையின் தாக்கம் சற்று குறைவாக இருந்தாலும் இரவு நேரங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் கடந்த 2ம்தேதி இரவே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி தொடர் விடுமுறை என்பதால் குற்றாலம் மெயின் அருவிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரை பார்த்து விட்டு சென்றனர்.

பழைய குற்றாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்ததால் வழிப்பாதை மற்றும் படிக்கட்டுகளில் தண்ணீர் வழிந்து சென்றது. தொடர் மழை காரணமாக ஐந்தருவி 5 கிளைகளிலும் தண்ணீர் ஆக்ரோஷமாக விழுந்ததை காண முடிந்தது. அருவிகளில் விழக்கூடிய உபரி நீர் தென்காசி, இலஞ்சி, ஆயிரப்பேரி, கீழப்புலியூர், பாட்டாக்குறிச்சி, சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட பாசன குளங்களுக்கு தண்ணீர் செல்வதால் நீர்நிலைகளில் அனைத்துமே நிரம்ப துவங்கியுள்ளது.

மேலும் செங்கோட்டை குண்டாறு அணை, மேக்கரை அடவி நயினார் அணைப் பகுதிகளுக்கு நீர்வரத்து வழக்கத்திற்கு மாறாக அதிகமாக வர துவங்கியுள்ளது.