அறிவியல் தொழில்நுட்பங்களை முழு ஈடுபாட்டுடன் கற்க வேண்டும்: கூடங்குளம் விஞ்ஞானி பேச்சு

பதிவு செய்த நாள் : 30 அக்டோபர் 2018 00:34


திருநெல்வேலி,:

அறிவியல் தொழில்நுட்பங்களை மாணவ, மாணவிகள் முழு ஈடுபாட்டுடன் கற்க வேண்டும் என பாளை.அறிவியல் மையத்தில் நடந்த குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கூடங்குளம் அணுமின்நிலைய விஞ்ஞானி கணபதி சுந்தரம் பேசினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்ககம், கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மாவட்ட அறிவியல் மையம் சார்பில் 26 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு பாளை.,யில் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட  கல்வி அலுவலர் வசந்தா தலைமை வகித்தார். அறிவியல் இயக்கக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் முத்துசாமி முன்னிலை வகித்தார்.  தொடர்ந்து, மாவட்ட அறிவியல் மைய அலுவலர் முத்துகுமார் துவக்கி வைத்தார்.  அறிவியல் இயக்கக செயலாளர்  சுரேஷ்குமார் அறிமுகவுரையாற்றினார்.  மாநாட்டின் நோக்கம் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் கணபதி பேசினார்.

தொடர்ந்து, கூடங்குளம் அணுஉலை விஞ்ஞானி கணபதிசுந்தரம் பேசுகையில்,‘‘ தாமஸ் ஆல்வா எடிசன் பல முறை தோல்வியடைந்த பின்னர்தான் தனது வெற்றியை எட்டினார். முயன்றால் தான் வெற்றி இலக்கை எட்ட முடியும். மாணவர்கள் கல்வி கற்றால் மட்டும் போதாது. புத்தகங்களை படிக்க வேண்டும். தான் கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். அறிவியல் தொழில்நுட்பங்களை மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் கற்க வேண்டும் ’’ என்றார். தூத்துக்குடி மாவட்ட  கல்வி அலுவலர் வசந்தா பேசுகையில்,‘‘ அறிவியல் தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகம் வேண்டும். ஆர்வம், ஈர்ப்புடன் செயல்பட்டால் எந்த தடை வந்தாலும் எளிதாக வெற்றிபெறலாம். மனித சமுதாயத்திற்கு பயன்படும் கண்டுபிடிப்புகளை படைக்க வேண்டும். அறிவியல் கண்டு பிடிப்புகளை சரியான பாதையில் பயன்படுத்த வேண்டும். தோல்விகள் பல அனுபவங்களை கற்றுத் தரும். வாய்ப்பை பயன்படுத்தி முயற்சி செய்தால் எளிதில் வெற்றி பெறலாம். ’’ என்றார்.

மாலையில் நிறைவுவிழா நடந்தது. இதில், மகேந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானி ராஜபாண்டியன், பாளை.சேவியர் பள்ளி ஆசிரியர் பீட்டர் பாஸ்கரன், அறிவியல் மைய கல்வி ஒருங்கிணைப்பாளர் மாரிலெனின், சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயராஜ் உட்பட பலர் பேசினர்.   இந்நிகழ்ச்சியில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் அறிவியல் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, மாணவர்களின் கண்டுபிடிப்புகளில், ரயில்வே தண்டவாளத்தில் இடையூறு ஏற்படும் வகையில் கல் குவியல், மக்கள் கூட்டம், விலங்கினங்கள் நிற்பதை முன்கூட்டியே ரயிலின் ஓட்டுநருக்கு தகவல் தெரிவிக்கும் கருவி, மழை காலங்களில் குளங்கள், ஏரிகள் நிரம்பி வெள்ளம் ஊருக்குள் வருவதை முன்கூட்டியே அறியும் வகையில் மைக்ரோ சிப் மூலம் அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கும் வகையிலான கருவி போன்றவைகள் சிறந்த கண்டுபிடிப்புகளாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான பரிசுகள் வழங்கப்பட்டன.