டிசம்பர் மாதத்தில் பணி நிறைவடையும் :திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை பொறியாளர் பேட்டி

பதிவு செய்த நாள் : 30 அக்டோபர் 2018 00:15


கன்னியாகுமரி,:

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் 22.5 கோடிரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் திருமலை திருப்பதி கோயில் பணிகள் வரும் டிசம்பர் மாதத்தில் நிறைவடையும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை பொறியாளர் சந்திரசேகர ரெட்டி கூறினார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது;-இந்தியா முழுவதும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆறு இடங்களில் கோயில் அமைக்க திட்டமிட்டு கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 22.5 கோடிரூபாய் மதிப்பீட்டில் கோயில் கட்டுமான பணிகள் நடந்துவருகிறது.இந்த கட்டிட பணிகள் வரும் டிசம்பர் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது

கோயில் கும்பாபிஷேகம் என்று நடத்துவது என்பதை திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்யும். பணியாளர் குடியிருப்பு கட்டுமான பணிகள் இரண்டு மாதத்தில் தொடங்கும். தமிழ்நாட்டில் வேலுர், சென்னை, ஆகிய இடங்களில் கோயில் உள்ளது. கன்னியாகுமரியில் பணி நடந்து வருகிறது. தற்போது குருஷேத்திராவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் இன்னும் இரண்டு மாதத்தில் பணிகள் நிறைவடையும். ஆந்திர மாநில தலைநகரம் உருவாகும் அமராவதியில் 150 கோடிரூபாய் மதிப்பீட்டில் முழுக்க முழுக்க கருங்கல்லில் ஆன கோயில் கட்டப்பட்ட உள்ளது. கன்னியாகுமரி  துறைமுக சாலையில் இருந்து கோயிலுக்கு வருவதற்கு இணைப்பு சாலை தற்போது நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.