மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் அரசு தயக்கம் காட்டக்கூடாது

பதிவு செய்த நாள் : 30 அக்டோபர் 2018 00:01


குலசேகரம்:

மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுப்பதில் அரசு தயக்கம் காட்டக்கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் பேசினார்.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினரின் முயற்சியால் அன்புநகர் கிராம குடியிருப்பில்  271 குடும்பங்களுக்கு 13 ஆண்டுக்கு பின்னர் மின்சாரம் கிடைத்தை சிறப்பிக்கும் வகையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது : குமரி மாவட்ட செயலர்பினுலால் சிங் என்னிடம் எப்போதும் பேசினாலும் இந்த அன்பு நகர்  கிராமத்திற்கு மின் இணைப்பு கிடைக்கவில்லையென ஆதங்கப்படுவார். அதை செய்து முடிக்க வேண்டிய நிலை ஏற்பட வேண்டுமென்று கூறுவார். சென்னையில் இருக்கும் நான் இதனுடைய முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள முடியவில்லையென்றபோதிலும்  முயற்சியை கைவிடாமல் பணி செய்யுங்கள் என்று கூறினேன்.  இப்போது இந்தப் பகுதி மக்களுக்கு மின்சாரம் கிடைத்துள்ளது. இதற்காக பாடுபட்ட மாவட்ட தலைவருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், மின்சார வாரியத்திற்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.  இந்த மலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து கொடுக்க வேண்டும். பல வீடுகள் இங்கு இருந்த போதிலும், அடிப்படை வசதிகள் நிறைவேறப்படாததால் அனைத்து வீடுகளிலும் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  வாக்களித்த மக்களை அரசுகள் ஏமாற்றக் கூடாது. இங்கு சாலை, குடிநீர், சமூக நலக்கூடம்  உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்க வேண்டும். 

 மக்களுக்கு நாங்கள் ஊழலற்ற ஆட்சியை கொடுக்கவே  விரும்புகிறோம்.  அதற்கான சூழல் உடனடியாக அமையவில்லையென்றால். எந்தக் கட்சி எங்களின் நேர்மையையும் பலத்தையும் புரிந்து  கொண்டு, எங்களை ஏற்றுக் கொண்டு கூட்டணி அமைக்கிறதோ அந்தக் கட்சிக்கு நீங்கள்  வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா, நடக்காதா  என்று தெரியவில்லை. நடக்காது என்று கூறக்கூடியவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆட்சியாளர்களும் மக்களுக்கும் இடையில் அதிக தூரம்  இடைவெளி எற்பட்டுவிட்டது. மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காத ஆட்சியாக இன்றைய ஆட்சியாளர்கள்  உள்ளனர்.

தமிழகத்தில் எந்தக் கட்சி வென்றாலும், தோற்றாலும்    மக்கள் மத்தியில் மரியாதைக்குரிய கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளது. நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படைத் தன்மைக்கு எடுத்துக்காட்டாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளது. அதனால் தான் எங்கள் கட்சிக் கொடியில் காமராஜர், மூப்பனார் படங்களை வைத்துள்ளோம்.

தீபாவளி பரிசு:   தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் அன்புநகரில் வசிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் தீபாவளி பரிசாக புத்தாடைகள்,  இனிப்புடன் தீபாவளி விருந்து வழங்கப்படும் என்றார்.

நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமை வகித்தார்.  மாநிலச் செயலர் ராஜமகாலிங்கம், மாவட்டப் பொருளர் பராமானந்த ஞானதாஸ்,  தலைமை நிலைய பொதுச் செயலர் புஷ்பாகரன், புஷ்பாகரன், மாவட்டத் துணைத் தலைவர் ஆல்பன், மாவட்டப் பொதுச் செயலர்கள் நிவின் சைமன், ஜெயராஜ், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் விஜூ,  மாவட்டச் செயலர்கள்  ராபின் மோசஸ், ராஜன், வக்கீல்  கிளாஸ்டன், ஆல்பர்ட் ராஜ்,  பத்மநாபபுரம் நகரத் தலைவர் அஜிகுமார்,  வட்டாரத் தலைவர்கள் ஐசக் ஜெயதாஸ், டென்னிஸ், தோமஸ், ராமகிருஷ்ணன், புதுக்கடை நகரத் தலைவர் ஜெரால்டு, வர்த்தக அணி தலைவர் ஜேசுராஜ், தக்கலை வடக்கு வட்டார  இளைஞர் அணி தலைவர் வினோ, இளைஞர் அணி மாவட்டச் செயலர் பிரேம் குமார், மாணவர் அணி மாவட்டச் செயலர் பினிஷ், பேச்சிப்பாறை நகரத் தலைவர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

வரவேற்பு: 

முன்னதாக  அன்பு நகர் கிராம மக்கள் சார்பில் செண்டை மேளம் முழங்க, தாலபொலியுடன்  ஜி.கே.வாசனுக்கு மக்கள் மரியாதை அளித்து கிராமத்திற்குள் அழைத்துச் சென்று வீடுகளில் மின்விளக்கு எரிவதை உற்சாகம் ததும்ப காட்டிக் கொடுத்தனர்.

கட்சி அலுவலகம் திறப்பு: 

முன்னதாக அவர் காலையில் முன்சிறை கிழக்கு மற்றும் கிள்ளியூர் வட்டார அலுவலகங்களை திறந்து வைத்தார்.  கருங்கலில் முன்னாள் எம்எல்ஏ ஜான்ஜேக்கப்பின் நினைவு கொடிக்கம்பத்தை திறந்து வைத்தார்.