போலீசாரின் கவலைகளை களைய மனவலிமை பயிற்சி முகாம் :டிஜிபி ராஜேந்திரன் புதிய முயற்சி

பதிவு செய்த நாள் : 29 அக்டோபர் 2018 23:42


சென்னை:

பணிச்சுமையில் அழுந்தும் தமிழக போலீசாருக்கு மனவலிமை மற்றும் உடல் திறனை மேம்படுத்தும் வகையில் அளிக்கும் அவர்களுக்கு தனியார் மருத்துவ நிறுவனம் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்க டிஜிபி ராஜேந்திரன் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார்.

காவல்துறையில் காவலர்கள் பல்வேறு பணிச்சுமையால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். 24 மணி நேரமும் காவல்பணியில் இருப்பதால் அவர்களது மனவலிமையும், உடல் திறனும் மேம்படும் வகையில் அவர்களுக்கு அவர்களது உடல்  நலனை பேணும் நோக்கில் அவர்களுக்கு மனநல பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த மாதம் பெங்களூருவில் உள்ள நிம்ஹான்ஸ் என்றழைக்கப்படும் தேசிய மனவலிமை, உடல் திறன் மேம்படுத்தும் நிறுவனத்துடன் தமிழக டிஜிபி ராஜேந்திரன் மற்றும் நிம்ஹான்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கங்காதர் ஆகியோர் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் பேரில் இந்த காவலர் நிறைவாழ்வு பயிற்சியினை தமிழக போலீசாரில் முதற்கட்டமாக 254 போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது. மேலும் ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், ஏஎஸ்பிக்கள் அந்தஸ்தில் உள்ள 110 பேர், 208 மனநல ஆலோசகர்களுக்கும் இந்த பயிற்சி வழங்கப்படுவதாக டிஜிபி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நாட்டின் நலனுக்காக இடைவிடாது ஓய்வின்றி பணிபுரிந்து வரும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பணிச்சுமையின் காரணாக அவர்களுக்கு மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் ஏற்படுகிறது. அதனை நிவர்த்தி செய்வதற்காக தமிழகத்தில் உள்ள ஒரு லட்சத்து 20 ஆயிரம் போலீசாருக்கும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 3 லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்களுக்கும் இந்த பயிற்சியானது நிம்ஹான்ஸ் நிறுவனத்தில் இருந்து பயிற்சி முடித்து வரும் போலீசார் மற்றும் மனநல ஆலோசகர்களால் தமிழகமெங்கும் வழங்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’ இவ்வாறு அவர் தெரிவித்தார். நேற்று பெங்களூருவில் உள்ள நிம்ஹான்ஸ் நிறுவனத்தின் கன்வென்ஷன் சென்டரில் நடந்த பயிற்சி முகாமில் தமிழக டிஜிபி ராஜேந்திரன், காவலர் நலன் கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்’’