குமரியில் கொட்டி தீர்த்த மழை :நாகர்கோவில் 46 மி.மீட்டர் பதிவு

பதிவு செய்த நாள் : 11 அக்டோபர் 2018 00:51


நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டத்தில்  தண்ணீரை கொட்டி தீர்த்த  மழையால் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு தலை தூக்கி உள்ளது.

தமிழகத்தையே உலுக்க போகிறது கனமழை என வானிலை ஆய்வு மையம் கடந்த வாரம் எச்சரிக்கை விட்டது. இதனால் கன்னியாகுமரி மாவட்டம் உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளும் உஷார் படுத்தப்பட்டனர். நேற்று காலையில் கடும் வெயில் நிலவி வந்த நிலையில் மதியம் தண்ணீரை கொட்டோ கொட்டு என கொட்டி தீர்த்தது. இதனால் ரோட்டில் தண்ணீர் ஆறுபோல் ஓடியது. மேகம் இருண்டு காணப்பட்டது. இடி மின்னலுடன்  சுமார் 2 மணிநேரம் வரை மழை நீடித்தது. நேற்று மாலை 4 மணிக்கு மேல்  நிலவரப்படி மழையின் அளவாக  நாகர்கோவில் 46 மில்லி மீட்டர், பூதப்பாண்டி 2.4, சுருளோடு 22.4, கன்னிமார் 1.4, ஆணைக்கிடங்கு 2 மி.மீட்டர் என பதிவாகி இருந்தது.