சபரிமலைக்கு பெண்கள் வர தடையில்லை: குமரி மாவட்டத்தில் 50 இடங்களில் சாலை மறியல்

பதிவு செய்த நாள் : 11 அக்டோபர் 2018 00:51


நாகர்கோவில்,:

கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யப்பா சேவா சமாஜம் மற்றும் இந்து அமைப்புகள் சேர்ந்து சுமார் 50 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சபரிமலைக்கு பெண்கள் வர தடையில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கேட்டும் கேரளா அரசை கண்டித்தும், இந்து ஆகம விதிகளுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களில்  சாலை மறியல் போராட்டம் நடந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை ஒன்றியத்தில் ஆரல்வாய்மொழி, இளச்சகுளம், தடிகாரன்கோணம், துவரங்காடு, அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் கன்னியாகுமரி, கொட்டாரம், சுசீந்திரம், அஞ்சுகிராமம், மயிலாடி, ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் ஈத்தாமொழி, ராஜாக்கமங்கலம், மேலசங்கரன்குழி, குருந்தன்கோடு ஒன்றியத்தில் பரசேரி, குருந்தன்கோடு, மண்டைக்காடு, குளச்சல், திங்கள்நகர், வெள்ளிச்சந்தை, அம்மாண்டிவிளை, மணவாளக்குறிச்சி, தக்கலை ஒன்றியத்தில் திக்கணங்கோடு, இரணியல், மொட்டவிளை, தக்கலை, வைகுண்டபுரம், திருவட்டார் ஒன்றியத்தில் குலசேகரம், திருவட்டார், பொன்மனை, காட்டாத்துறை, மேல்புறம் ஒன்றியத்தில் அருமனை, களியக்காவிளை, மேல்புறம், முஞ்சிறை ஒன்றியத்தில் கொல்லங்கோடு, நித்திரவிளை, புதுக்கடை, கூட்டாலுமூடு, சூரியகோடு, கிள்ளியூர் ஒன்றியத்தில் மார்த்தாண்டம், தொழிக்கோடு, கருங்கல், நாகர்கோவிலில் வடசேரி, மீனாட்சிபுரம், பீச்ரோடு, ஆசாரிபள்ளம், கலெக்டர் அலுவலகம் முன்புறம் உட்பட சுமார் 50 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்துக்கு மாவட்ட பா.ஜ.க., தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். வடசேரியில் நடந்த மறியலுக்கு நம்பிராஜன் தலைமை வகித்தார். இந்த மறியல் போராட்டத்தில் அய்யப்பா சேவா சமாஜம் மற்றும் பா.ஜ.க., வினர், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள்  உட்பட சுமார் 2000க்கும் மேற்பட்டோர்  கைது செய்யப்பட்டனர் என மாவட்ட பாஜ.க., தலைவர் முத்துகிருஷ்ணன் தெரிவித்தார்.

புதுக்கடை

கூட்டாலுமூட்டில் நடந்த மறியல் போராட்டத்துக்கு முன்னாள் பைங்குளம் கிராம பஞ்., தலைவர் சந்திரகுமார் தலைமை வகித்தார், முஞ்சிறை ஒன்றிய பா.ஜ.க., தலைவர் பிரேம் குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சவுந்தர்ராஜன், முஞ்சிறை ஒன்றிய மகளிரணி தலைவி தங்கம், இலக்கிய அணி தலைவர் தேவதாஸ் உட்பட மறியலில் ஈடுபட்ட 38 பேரை போலீசார் கைது செய்தனர். காஞ்சாம்புரத்தில் ஏழுதேசம் நகர தலைவர் ராஜகுமார் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 41 பேரை போலீசார் கைது செய்தனர். மணக்காலையில்  ஹரிகுமார் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 28 பேரை போலீசார் கைது செய்தனர். காப்புகாட்டில் விளாத்துறை நகர தலைவர் மோகன்தாஸ் தலைமையிலும், கீழ்குளத்தில் கீழ்குளம் நகர தலைவர் ராஜன் தலைமையிலும் மறியலில் ஈடுபட்டனர்.

மார்த்தாண்டம்

மார்த்தாண்டம் புதிய பஸ் ஸ்டாண்ட் முன் ஏராளமான இந்து முன்னணியினர் நேற்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்சை உண்ணாமலைக்கடை பஞ்., முன்னாள் தலைவர் ஜெயசீலன், நிர்வாகிகள் ரெகு, ராஜேந்திரன், சிபின் உட்பட போராட்டக்காரர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதைக்கண்ட டிரைவர் திடீரென பஸ்சை பஸ் ஸ்டாண்டிற்குள் கொண்டு சென்றார். மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் போராட்டக்காரர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அய்யப்ப சாமியின் போட்டோவை கையில் பிடித்து ரோட்டில் தேங்காய் உடைத்த போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். மார்த்தாண்டம் போலீஸ் எஸ்ஐ ஈஸ்வரபிள்ளை தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்து பஸ்சில் ஏற்றினர். அப்போது பேராட்டக்காரர்களில் சிலர் கையிலிருந்த ஐயப்ப சாமி போட்டோவையும், கொடியையும் பஸ்சின் முன் பகுதியில் கட்டினர். தொடர்ந்து  அவர்களை போலீசார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

மணவாளக்குறிச்சி:

மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, அம்மாண்டிவிளை மற்றும் வெ ள்ளிச்சந்தை ஆகிய நான்கு இடங்களில் அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில் ரோடு மறியல் போராட்டம் நடந்தது. மண்டைக்காட்டில் குருந்தன்கோடு ஒன்றிய இந்து முன்னணி பொதுக்குழு உறுப்பினர் பிரதீப்குமார் தலைமையில் நடந்த போராட்டத்தில் 9 பெண்கள் உட்பட 34 பேர், மணவாளக்குறிச்சியில் பா.ஜ.க. மண்டல் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் 10 பெண்கள் உட்பட 38 பேர், அம்மாண்டிவிளையில் பா.ஜ.க. இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் சிவகுமார் தலைமையில் 17 பேர், வெள்ளிச்சந்தையில் குருந்தன்கோடு ஒன்றிய பா.ஜ.க. துணைத் தலைவர் முருகேசன் தலைமையில் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.  

திக்கணங்கோடு

திக்கணங்கோடு சந்திப்பில் நடந்த மறியல் போராட்டத்தில் பா ஜ க மாவட்ட பொது செயலாளர் தங்கப்பன், மாவட்ட சமயவகுப்பு அமைப்பாளர் ராமசந்திரன், மாவட்ட செயற்குழு  உறுப்பினர் ஸ்ரீனிவாச பிரம்மா, தக்கலை ஒன்றிய துணைத்தலைவர் ஜெகன் ஜோதிபாஷ்,  திக்கணங்கோடு பஞ்,.முன்னாள் தலைவர் முருகராஜன், துணைத்தலைவர் இந்திரகுமார்  உள்பட 88 பேர் கைது செய்யப்பட்டனர். 

திற்பரப்பு,

கடையால் பஞ்.,க்குட்பட்ட மலைப் பகுதியான பத்துகாணியில் நடந்த மறியல் போராட்டத்தில் பத்துகாணி சிவபுரம் மகாதேவர்  கோயில் நிர்வாக குழு தலைவர் ரவீந்திரன்,  பா ஜ.க., நிர்வாகிகள் மனோகரன், சந்தோஷ், பி.எம்.எஸ் நிர்வாகி ராஜேந்திரன் 75 பெண்கள் உட்பட 157 பேர் கைது செய்யப்பட்டனர்.

குலசேகரம்

குலசேகரம் கான்வென்ட் ஜங்சனில் நடந்த மறியலில் சஜித்குமார் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். 

கருங்கல்

கருங்கல் ஜங்ஷனில் பா.ஜ.க., விவசாய அணி மாநில துணை தலைவர் ரவீந்திரன், கப்பியறை பஞ்., முன்னாள் துணை தலைவர் சந்திரன் உள்பட 39 பேர் கைது செய்யப்பட்டனர்.

படம் உண்டு

களியக்காவிளை -

  களியக்காவிளை ஜங்ஷனில்  பா.ஜ.க களியக்காவிளை நகர தலைவர் சரவணவாஸ் நாராயணன்,  மாநில செயற்குழு உறுப்பினர் தேவதாஸ், மகளிர் அணி தலைவர் வசந்த குமாரி என 3 பெண்கள் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

சுசீந்திரம்

அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் ஒன்பது இடங்களில் இந்த பஸ் மறியல் நடந்தது.  சுசீந்திரம் மெயின் ரோட்டில் நடந்த பஸ் மறியல் போராட்டத்தில் ஐயப்ப சேவா சங்க பொறுப்பாளர்கள், பல்வேறு இந்து சமய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.   

படம் : ஆரல் 1

ஆரல்வாய்மொழியில் பா.ஜ.க., மண்டல தலைவர் மாதவன், திருக்கோயில் திருமடங்கள் மாநில தலைவர் காளியப்பன் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.