சென்னையில் மியான்மர் காடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட விலங்குகள், பறவைகள் சிக்கின

பதிவு செய்த நாள் : 09 அக்டோபர் 2018 00:03


சென்னை:

சென்னையில் உள்ள பண்ணை வீட்டில் டிஆர்ஐ அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் மியான்மர் காடுகளில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட விதவிதமான பறவைகள், விலங்குகள் சிக்கின. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வெளிநாடுகளில் உள்ள அடர்ந்த காடுகளில் வாழும் வித்தியாசமான பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை சட்டவிரோதமாக பிடித்துக் கொண்டு வந்து இந்தியா முழுவதும் ஒரு கும்பல் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக நடந்து வரும் இது சட்டவிரோதமான செயல் ஆகும். இதனை இந்தியா முழுவதும் கடத்தல் நெட்ஒர்க்கில் ஈடுபட்டு வரும் ஒரு கும்பல் தொடர்ச்சியாக செய்து வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு (டிஆர்ஐ) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் வந்தன.

அடர்ந்த காடுகளில் சுதந்திரமாக சுற்றித்திரியும் இது போன்ற விலங்குகளை பிடித்து வந்து பல லட்சங்களுக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். இவை பண்ணை வீடுகளில் உள்ள தோட்டங்களில் இயற்கை அழகுக்காக பெரிய கோடீஸ்வரர்கள் வாங்கி வளர்க்கின்றனர். இது தொடர்பாக டிஆர்ஐ அதிகாரிகள் கடந்த வாரம் கோல்கத்தா, விமான நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அதில் அங்கு வந்துள்ள சரக்குப் பெட்டகங்களை சோதனையிட்டதில் அதில் விதவிதமான வனவிலங்குகள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். அதற்குள் 35 விதமான பறவை இனங்கள், விலங்குகள் மற்றும் ஒரு மார்மோசெட் இனத்தைச் சேர்ந்த குரங்கு குட்டி மற்றும் பெங்கால் இனத்தைச் சேர்ந்த பூனை ஆகியவை இருந்தன. இவை மியான்மரில் இருந்து வேறு பெயரில் கடத்திவரப்பட்டவை என தெரியவந்தது. இது தொடர்பாக மிசோராமின் தலைநகரான ஐஸ்வாலைச் சேர்ந்த நபரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் தனக்கு மும்பை, கல்கத்தா, புனே, சென்னை ஆகிய இடங்களில் இது போன்ற வனவிலங்குகளை கடத்துவதற்கு ஏஜெண்டுகள் உள்ளனர் எனவும் அவர்கள் மூலம் லட்சக்கணக்கில் வனவிலங்குகளை சென்னைக்கு சப்ளை செய்துள்ளோம் என்ற அதிர்ச்சித்தகவல்களை வெளியிட்டார். அதன் பேரில் டிஆர்ஐ அதிகாரிகள் சென்னை நகரில் வனவிலங்குகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பல்கள் நடமாட்டம் பற்றி தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள புறநகர் பகுதிகளில் உள்ள பண்ணை வீடுகளில் வனவிலங்குகளை ரகசியமாக வைத்து வளர்ப்பது தெரியவந்தது. அதன் பேரில் சென்னையில் உள்ள ஒரு பண்ணை வீடு மற்றொரு தனியாருக்கு சொந்தமான வீடுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 வகையான பறவைகள் விலங்குகளை டிஆர்ஐ அதிகாரிகள் மீட்டனர். அவற்றில் ஸ்கார்லட், மகாவ், ஹார்லிகுயின் மாஸ்கோ, புளூ கோல் மக்காவ் ஆகிய விதவிதமான பறவைகள் இதில் அடங்கும். அதே போல விதவிதமான குரங்கு வகைகள் அங்கு பதுக்கப்பட்ட இருந்தன. இது தொடர்பாக அவற்றை அங்கு மியான்மர் காடுகளில் இருந்து பிடித்து வந்து பதுக்கி வைத்த நபரை டிஆர்ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

காடுகளில் வாழும் விலங்குகள், பறவைகளை உரிய அனுமதியின்றி ஏற்றுமதி, இறக்குமதி செய்வது சட்டப்படி குற்றமாகும். மேலும் காட்டுவிலங்குகளை வீட்டில் வளர்ப்பதற்கு உரிய அரசு அனுமதி பெறவேண்டும். வனவிலங்குகளை வேட்டையாடினாலோ கடத்தி விற்பனை செய்தாலோ அல்லது அவற்றை ஏற்றுமதி செய்தாலே அது வனவிலங்குகள் வதை சட்டத்தின் கீழ் குற்றம் ஆகும். தண்டனை நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க  சட்டத்தில் இடம் உள்ளது என டிஆர்ஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.