அதிவேகமாக சென்ற காரால் விபத்து: 3 பேர் காயம்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2018 01:00


திருநெல்வேலி:

பாளை.மேலப்பாளையம் ரோட்டில் அதிவேகமாக வந்த கார் அடுத்தடுத்து 2 பைக், 2 சைக்கிள் ஒரு கார் மீது மோதியதில் 3 பேர் காயமடைந்தனர்.

நெல்லை தெற்கு பைபாஸ் ரோடு ரிலையன்ஸ் பல்க் ரோட்டில் இருந்து மேலப்பாளையம் செல்லும் ரோட்டில் ஒரு கார் வேகமாக சென்றது. அந்த காரை வாலிபர் ஒருவர் ஓட்டியுள்ளார். அருகில் இளம் பெண்  ஒருவர் இருந்துள்ளார். கார் அதிவேகமாக சென்ற போது, முன்னால் சென்ற பைக் மீது மோதியது. அதன் பிறகு அந்த வாலிபரின் கட்டுப்பாட்டை இழந்த கார், ரோட்டை விட்டு மண்ரோட்டில் தாறுமாறாக ஓடியது. பேக்கரி அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார், ஒருபைக், 2 சைக்கிள் மீது மோதிவிட்டு ஹேப்பி காலனி ரோட்டில் பாய்ந்தது. அந்த காலனி ரோடு மின்கம்பத்தில் கார் வேகமாக மோதியது. இதில் மின்கம்பம் இரு துண்டுகளாக உடைந்து ரோட்டில் சரிந்தது. உடனடியாக அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இந்த விபத்தினால் அப்பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய அந்த வாலிபர்,அவருடன் இருந்த இளம்பெண் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் கூடியதால் அவர்கள் இருவரும் அங்கிருந்து நைசாக தப்பியோடினர்.

இந்த விபத்தில், பைக்கில் சென்ற கங்கைகொண்டான் பெருமாள்சன்னதி தெருவை சேர்ந்த துரைராஜ்(32), கீழ முன்னீர்பள்ளம் மேலத்தெருவை சேர்ந்த முத்துப்பாண்டியன்(23), மற்றும் ரோட்டில் நடந்து சென்ற வல்லநாட்டை சேர்ந்த சந்தனராஜ் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் மூவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளை.ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து பாதிப்பு:

இந்த விபத்து குறித்து மேலப்பாளையம் போலீஸ் மற்றும் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மின்வாரித்திற்கு தகவல் அளித்தனர். மின்சாரத்தை துண்டித்து வேறு மின்கம்பத்தை மாற்றும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கிய வாகனங்களை போலீசார் மீட்டுச் சென்றனர். பேக்கரி முன்பு எப்போதும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். விபத்து நடந்த நேரத்தில், அதிர்ஷ்டவசமாக பேக்கரி முன்பு யாரும் நிற்கவில்லை. சந்தனராஜ் என்பவர் மட்டுமே காயமடைந்துள்ளார். இந்த விபத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் வந்து போக்குவரத்தை சரி செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டிய வாலிபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.