பியூட்டி பார்லரில் புகுந்து பெண்ணை அடித்து உதைத்த திமுக முன்னாள் கவுன்சிலர் சஸ்பெண்ட்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2018 00:07


சென்னை:

பியூட்டி பார்லருக்குள் புகுந்த திமுக முன்னாள் கவுன்சிலர் பெண்ணை அடித்து உதைக்கும் வீடியோ வாட்ஸ்அப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருச்சியை அடுத்த பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் பியூட்டி பார்லர் நடத்தி வருபவர் சத்தியா. பெரம்பலூர் வேப்பந்தட்டு, அன்னமங்கலத்தை சேர்ந்த திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் (52) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செல்வகுமார், சத்தியாவின் பியூட்டி பார்லருக்குள் புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக அடித்துள்ளார். அவரை கீழே தள்ளி காலால் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். இந்த சம்பவம் கடந்த மே மாதம் நடந்ததாக தெரிகிறது. இது குறித்து சத்தியா பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சத்தியா அந்த வீடியோ காட்சிகளை வாட்ஸ்ஆப்பில் பதிவு செய்தார். அது வைரலாக பரவியது. இது குறித்து டிவி சேனல்களிலும் செய்திகள் வெளியாயின. இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரை நேற்று கைது செய்தனர்.

இது  தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செல்வகுமாரை கட்சியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக இது போன்று தாக்குதல் நடத்தப்படும் காட்சிகள் வாட்ஸ்அப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த மாதம் சென்னை கேகே நகரில் ஓசி பிரியாணி கேட்டு திமுக பிரமுகர் யுவராஜ் கடை உரிமையாளரை பாக்சிங் குத்து விட்ட காட்சிகள் வாட்ஸ்ஆப்பில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்த ஸ்டாலின் நேராக அந்த பிரியாணி கடைக்கே சென்று ஆறுதல் தெரிவித்தார். கட்சியிலிருந்து யுவராஜ் உள்ளிட்ட பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதே போல கடந்த வாரம் செல்போன் கடையில் ஊழியர் ஒருவரை திமுக பிரமுகர்கள் தாக்கியதும் வாட்ஸ்ஆப்பில் வெளியானது. அதனையடுத்து தற்போது பியூட்டி பார்லர் பெண்ணை தாக்கும் திமுக கவுன்சிலர் செல்வகுமார் தாக்கும் காட்சிகள் பேஸ்புக், வாட்ஸ்ஆப்பில் வேகமாக பரவி வருகிறது.