கொள்ளையர்களை விரட்டிப்பிடித்த போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் பாராட்டு

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2018 00:38


சென்னை,:

சென்னை, திருவொற்றியூர் பகுதியில் செல்போன் கொள்ளையர்களை விரட்டிப் பிடித்த போக்குவரத்து போலீசார் இருவருக்கு கமிஷனர் விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கி பாராட்டினார்

தேனி மாவட்டம், போடி, பத்ராகாளிபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். கண்டெய்னர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10ம் தேதியன்று இரவு 10.30 மணியளவில் கண்டெய்னர் லாரியை ஓட்டிக் கொண்டு சென்னை எண்ணுார் துறைமுகம் நோக்கி சென்றார். எண்ணூர் விரைவு சாலை,  தாங்கல் பெட்ரோல் பங்க் அருகே லாரியை வரிசையில் நின்றிருந்தார். அப்பொழுது அங்கு வந்த 2 நபர்கள் முருகேசனிடம் கத்தியைக்காட்டி பணம் கேட்டனர். முருகேசன் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த 2 பேரும் அவரை கத்தியால் வெட்டினர். அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள சாம்சங் செல்போன்-1 மற்றும் ரூ.1, 500 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். அவர்களை முருகேசன் திருடன் திருடன் என சத்தம் போட்டபடி ரோட்டில் ஓடினார். அப்போது அங்கு போக்குவரத்துப் பணியிலிருந்த திருவொற்றியூர் போக்குவரத்து காவலர் குமார் என்பவரிடம் விவரத்தை கூறினார். காவலர் குமார் துரத்திச் சென்று செல்போன் கொள்ளையர்களில் ஒருவரான எர்ணாவூரைச் சேர்ந்த ராம்குமார் (வயது 29) என்பவரை பிடித்து திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். கொள்ளையர்கள் வெட்டியதில் காயமடைந்த டிரைவர் முருகேசனை அருகிலுள்ள தனியார் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் பிடிபட்ட ராம்குமார் அளித்த தகவலின் பேரில் பணம் மற்றும் செல்போனுடன் தப்பிச் சென்ற மற்றொரு கொள்ளையன் எண்ணுாரைச் சேர்ந்த மதன் (32) என்பவரை திருவொற்றியூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

அதே போல திருவொற்றியூர் போக்குவரத்து போலீஸ் தலைமைக் காவலர் முருகானந்தம் நேற்று முன்தினம் இரவு பணியிலிருந்தார். அப்போது அதிகாலை சுமார் 3.45 மணியளவில் எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை, எல்லையம்மன் கோயில் அருகே ஆட்டோவில் ஒரு நபரை 2 பேர் தாக்கி கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு ஏட்டு முருகானந்தம் விரைந்து சென்று பார்த்தார். அப்போது ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேர், கால் டாக்சி டிரைவரை தாக்கி அவரிடமிருந்து செல்போனை பறிக்க முயன்று கொண்டிருந்தனர். அவர்களை மடக்கிப் பிடித்த முருகானந்தம் ஆட்டோ டிரைவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், கால்டாக்சி டிரைவர் விருதுநகரைச் சேர்ந்த கோர் மேலியூ (29) என்பது தெரியவந்தது. அவர் திருவொற்றியூர் சன்னதி தெரு அருகே சென்று கொண்டிருந்தபோது ஆட்டோ ஓட்டுநர்களில் பிரசாந்த் என்பவரது ஆட்டோவை இடித்துவிட்டதால், பிரசாந்த் மற்றும் அவரது நண்பர் சுகந்தர் ஆகியோர் மேலியூவை தங்களது ஆட்டோவில் கடத்திச் சென்று செல்போனை பிடுங்க முயன்றது தெரியவந்தது. அவர்களை திருவொற்றியூர் போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்த திருவொற்றியூர் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர் குமார், முருகானந்தம் ஆகியோரை சென்னை நகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதிகள் வழங்கி பாராட்டினார்.