கோவில்பட்டி:
கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே ரயில்வே உயர்அழுத்த மின்சார வயர் அறுந்து விழுந்ததால் கோவில்பட்டி, கடம்பூர், குமாரபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரயில்கள் நிறுத்தப்பட்து சுமார் 2 மணி முதல் 4 மணி நேரம் வரை தாமதமாக சென்றதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளானர்.
கோவில்பட்டி பகுதியில் நேற்று காற்று, இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்நிலையில், கோவில்பட்டி ரயில் நிலையத்தையடுத்த வேலாயுதபுரம் பகுதியில் ரயில்வே துறைக்குட்பட்ட ரயில்களை இயக்கும் உயர்அழுத்த மின்சார வயர் சூறை காற்றில் அறுந்து விழுந்தது.
இதையடுத்து, கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து சாத்துார் நோக்கி புறப்பட்ட இண்டர்சிட்டி ரயில் வேலாயுதபுரம் அருகே நிறுத்தப்பட்டது. பின்னர், இன்டர்சிட்டி ரயில் டீசல் என்பதால் சுமார் 5 மணிக்குப் பின் சாத்துார் நோக்கி புறப்பட்டது.
இந்நிலையில், திருநெல்வேலியில் இருந்து மும்பை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் 4.13 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையம் வந்தடைந்தது. திருநெல்வேலியில் இருந்து ஜம்மு-காஷ்மீர் செல்லும் விரைவு ரயில் 5.07 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையம் வந்தடைந்தது.
மின்வயர் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் இரு ரயில்களும் கோவில்பட்டி ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் எக்ஸ்பிரஸ் டீசல் இன்ஜின் என்பதால் 7.50 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து சாத்துார் நோக்கி புறப்பட்டது.
குமாரபுரம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த துாத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் அங்கிருந்து புறப்பட்டு சுமார் 8.05 மணிக்கு கோவில்பட்டியில் இருந்து புறப்பட்டது. இதையடுத்து, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த தாதர் ரயில், விருதுநகரில் இருந்து டீசல் இன்ஜின் கொண்டுவரப்பட்டு சுமார் 9 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.
மணியாச்சி, கடம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் மின்சார ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், முத்துநகர் உள்ளிட்ட எலக்ட்ரிக்கல் ரயில் ஒவ்வொன்றும் கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து டீசல் இன்ஜின் மூலம் சாத்துார் வரை கொண்டு சென்று பின்னரே அங்கிருந்து எலக்ட்ரிக்கல் ரயிலாக செல்லும்.
இதனால் அனைத்து ரயில்களும் சுமார் 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை கோவில்பட்டியில் இருந்து தாமதமாகவே புறப்பட்டு செல்கின்றன. இதனால் ரயிலுக்காக பயணிகள் வெகு நேரம் காத்திருந்து பெரும் அவஸ்தைக்குள்ளாயினர்.
மேலும் கோவில்பட்டி வரை வந்த வந்த பயணிகள் பஸ்சில் அருகிலுள்ள ஊர்களுக்கு சென்றதால் முன்பதிவில்லா பயணிகள் பெட்டி வெறிச்சோடி காணப்பட்டது. ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்பட்டதால் ரயிலில் வியாபாரம் செய்யும் போளி உள்ளிட்ட சிற்றுண்டி வியாபாரிகளுக்கு வியாபாரம் சூடு பிடித்ததால் படு குஷியடைந்தனர்.
துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ள மின்வயரை சரி செய்யும் பணியில் விருதுநகர், கோவில்பட்டி, மதுரை உள்ளிட்ட ரயில்வே மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.