காங்., பாரத் பந்த் :தக்கலையில் 96 பேர் கைது

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2018 01:06


தக்கலை:

தக்கலையில் பெட்ரோல், டீசல், காஸ் விலையுயர்வை கண்டித்து நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 96 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டனர்.

சமீபகாலமாக பெட்ரோல், டீசல், காஸ் விலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக எகிறியது. இதனால் பயனாளிகள் அனைவரும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில் பாரத் பந்த்-க்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. இந்த பந்த் மறியல் போராட்டத்திற்கு திமுக, இடது கம்யூனிஸ்ட், அதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு கொடுத்தது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 இடங்களில் மறியல் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாரத் பந்த்-ஐ யொட்டி தக்கலை, கொல்லன்விளை, பத்மனாபபுரம், முட்டைக்காடு, குமாரபுரம், சுருளகோடு, முளகுமூடு, மேக்காமண்டபம், இரணியல் உட்பட அனைத்து ஊர்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. நேற்றைய கடையடைப்பின்போது எவ்வித நெருக்கடியும் இன்றி பஸ்கள் இயங்கின. இதனால் பள்ளி மாணவர்கள் காலாண்டு தேர்வில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக அமைந்தது. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தால் காலாண்டு தேர்வும் கேள்வி குறியாயிருக்கும்.

தக்கலையில் முன் நடந்த  மறியல் போராட்டத்திற்கு நகர காங்., தலைவர் ஹனுகுமார் தக்கலை வட்டார மா. கம்யூ.,  செயலாளர் சுஜா ஜாஸ்மின், நகர திமுக செயலாளர் மணி முன்னிலை வகித்தனர். லாரன்ஸ் கோஷங்களிட்டு போராட்டத்தை தொடக்கி வைத்தார். முஸ்லிம் லீக் அப்துல் அஸிஸ், தக்கலை ஒன்றிய மதிமுக செயலாளர் ஜேபி சிங், காந்திய மக்கள் இயக்க செயலாளர் ஜார்ஜ் பிலீஜின் உட்பட பலர் போராட்டத்தை விளக்கி பேசினர். டிஎஸ்பி கார்த்திகேயன் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னாள் எம்பி பெல்லார்மின் போராட்டத்தை விளக்கி பேசி பஸ் மறியல் போராட்டத்தை துவக்கி வைத்தார். மறியல் போரில் ஈடுபட்டவர்களில் சிலர் சாலையில் உருண்டு படுத்து கோஷங்களிட்டனர்.  சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீஸ் படை போராட்டக்காரர்களை கைது செய்து வேனில் ஏற்றியபோது காங்கிரஸ் தொண்டர்கள் நடந்தே வருகிறோம் என கோஷங்களிட்டபடி முன்னோக்கி நடந்ததால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்குமிடையில் தள்ளுமுள்ளு நடந்தது. இதனால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசாரால் கைது செய்யப்பட்ட  96 பேரும் மேட்டுக்கடையில் உள்ள தனியார் மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டனர்.