காங்கிரஸ் பாரத் பந்த் :குமரியில் நான்கு பஸ்கள் கண்ணாடி உடைப்பு

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2018 01:05


தக்கலை,:

நேற்று தக்கலை சுற்றுவட்டார பகுதியில் நடந்த பந்த்தை யொட்டி  4 பஸ்கள் கல்லெறிந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல், காஸ் விலையுயர்வை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் நேற்று நடந்த ‘பந்த்’ திற்கு  ஆதரவு கேட்டு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவில் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த தடம் எண் 451 என்ற இரு பஸ்களை பரைக்கோடு இரவிப்புதூர்கடை ஆகிய பகுதிகளில் பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் கல்லால் எறிந்து கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பரைக்கோட்டில் நடந்த சம்பவம் குறித்து உண்ணாமலைக்கடை ஆயிரந்தெங்கு பகுதியை சேர்ந்த டிரைவர் அஜித் தக்கலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதுபோன்று கன்னியாகுமரியிலிருந்து களியக்காவிளை நோக்கி சென்று கொண்டிருந்த தடம் எண் 303 என்ற பஸ்சையும் மர்ம நபர்கள் 2 பேர் பள்ளியாடி பழைய கடை பக்கம் வைத்து கல்லால் எறிந்து உடைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து பாலவிளையை சேர்ந்த டிரைவர் ஜெஸ்டின் ஷாஜி தக்கலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். நேற்று காலை திருச்செந்தூரிலிருந்து களியக்காவிளை நோக்கி வந்து கொண்டிருந்த தடம் எண் 576 என்ற பஸ்சையும் மர்ம நபர்கள் கல்லெறிந்து உடைத்தனர். இந்த தாக்குதலால் பஸ் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.  சம்பவம் குறித்து டிரைவர்கள் கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் சப் இ.ன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.