பாஸ்போர்டை முடக்கி வெ ளிநாடு செல்ல விடாமல் தடுக்கின்றனர்: சோபியாவின் தந்தை

பதிவு செய்த நாள் : 05 செப்டம்பர் 2018 01:06


துாத்துக்குடி:

அரசை கேள்வி கேட்பவர்கள் இருக்க கூடாது என்று நினைக்கின்றனர். எனது மகள் பாஸ்போர்டை முடக்க நினைக்கின்றனர் என்று சோபியாவின் தந்தை டாக்டர் சாமி வேதனை தெரிவித்தார். நாங்கள் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை என்று அவர் கூறினார்.

துாத்துக்குடி விமான நிலையத்தில் பா.ஜ., ஆட்சியை பாசிச ஆட்சி என்று விமர்சித்ததற்காக சோபியா கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெ ளியே வந்தார். இந்த சம்பவத்தில் தனது மகள் மீது எந்த தவறும் இல்லை. பிரச்னைக்கு தமிழிசை சவுந்திரராஜனும் அவருடன் வந்த பா.ஜ., கட்சியினரும் தான் காரணம் என்று சோபியாவின் தந்தை டாக்டர் சாமி தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது;

நான் தமிழிசை மற்றும் அவருடன் வந்தவர்கள் மீது கொடுத்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரச்னைக்கு காரணமான அவர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இந்த பிரச்னையில் அடுத்த கட்டம் என்ன செய்வது என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம். எனது மகள் ஆராய்ச்சி படிப்பு படிக்கிறார். அவரது படிப்பை தடுக்கவும், அவரது பாஸ்போர்டை முடக்கவும், அவரது கேரியரை ஸ்பாயில் பண்ணவும் நினைக்கின்றனர்.

அரசை எதிர்த்து கேள்வி கேட்பவர் இருக்க கூடாது என்பதற்கு தான் இது போன்ற அடக்குமுறையை ஏவுகின்றனர். எனது மகள் மீது வேண்டும் என்றே தமிழிசை தீவிரவாதி என்கிறார். இது மிகப் பெரிய தவறான செயல். எங்களுக்கு அரசியல் பலம் கிடையாது. நாங்கள் அரசியல் வாதிகளும் கிடையாது. அவர்களது சப்போர்ட்டும் எங்களுக்கு இல்லை.

தமிழகத்தில் ஸ்டெர்லைட், மீத்தேன், எட்டு வழிச்சாலை, ஜி.எஸ்.டி.,உள்ளிட்ட பல்வேறு அரசின் திட்டங்களை எதிர்த்து மக்கள் போராடுகிறார்கள். இதனால் ஒவ்வொருவரும் ஒரு விஷயத்தில் பாதிக்கப்படுபவர்கள் அரசை எதிர்க்கிறார்கள். அது போன்று தான் எனது மகளும் எதிர்த்தார். அதற்கு இப்படி செய்கின்றனர். எனது மகள் பாஸ்போர்டை முடக்க நினைக்கின்றனர். இனிமேல் சோபியா வெ ளிநாடு செல்லக் கூடாது என்று நினைக்கின்றனர். இவ்வாறு சாமி தெரிவித்தார்.