மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ. 22 லட்சம் மோசடி: பலே ஆசாமி கைது

பதிவு செய்த நாள் : 19 ஆகஸ்ட் 2018 02:09

சென்னை,:

மின்வாரிய அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 22 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர், பெரிய பாளையம், பஜார் தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 42). இவருக்கு அவரது நண்பர் மூலம் திருவாரூர், மன்னார்குடியைச் சேர்ந்த முருகேசன் (45) என்பவர் கடந்த 2016ம் ஆண்டு அறிமுகமானார். முருகேசன் தனக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளதாகவும், மின்வாரிய அலுவலத்தில் அதிகாரி பணி காலியாக உள்ளதால் அந்த வேலையை வாங்கித் தருவதாகவும், ஆனால் அதற்கு பணம் ரூ11 லட்சம் செலவாகும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பிய முருகானந்தம் கடந்த 2016ம் ஆண்டு ரூ.11 லட்சம் பணத்தை முருகேசனிடம் கொடுத்தார். மேலும் தனது நண்பரான ராஜேந்திரன் என்பவரையும் முருகானந்தத்திடம் அறிமுகப்படுத்தி வைத்து அவருக்கும் வேலை வாங்கித்தரும்படி கேட்டுள்ளார். அதன் பேரில் ராஜேந்திரனும் ரூ.11 லட்சத்தை முருகேசனிடம் கொடுத்தார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக முருகேசன் சொன்னபடி மேற்படி இருவருக்கும் வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.

ஏமாந்து போன இருவரும் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டனர். ஆனால் முருகேசன் பணத்தை தராமல் அவர்களை மிரட்டியதாக தெரிகிறது. இது தொடர்பாக முருகானந்தம், ராஜேந்திரன் ஆகியோர் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இருவரிடமும் பணம் ரூ.22 லட்சம் பெற்று கொண்டு வேலையும்

வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பித் தராமல், அவர்களை மிரட்டியது உண்மை என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் முருகேசன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையி அடைக்கப்பட்டார்.