டிஜிபி பதவி உயர்வு எப்போது? ஏக்கத்தில் 6 ஏடிஜிபிக்கள்...

பதிவு செய்த நாள் : 19 ஆகஸ்ட் 2018 02:08

சென்னை,:

தமிழக காவல்துறையில் டிஜிபி பதவி உயர்வு எப்போது வரும் என 6 ஏடிஜிபிக்கள் ஏக்கத்துடன் காத்துக்கிடக்கின்றனர். சீனியாரிட்டி வந்து 2 ஆண்டுகள் ஆகியும் அதற்கான பைல்கள் ஆமை வேகத்தில் நகர்வது குறித்து அரசுத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை என புலம்புகின்றனர்.

கடந்த 1986ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகளாக ஜாபர்சேட், சஞ்சீவ்குமார், ஸ்ரீ லட்சுமி பிரசாத், அசுதோஷ் சுக்லா, மிதிலேஷ்குமார் ஜா, தமிழ்செல்வன், ஆஷிஷ் பெங்க்ரா ஆகிய 7 பேர் தமிழக காவல்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் சஞ்சீவ்குமார் கடந்த ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமாகி விட்டார். மீதம் உள்ள 6 பேருக்கும் கடந்த 2016ம் ஆண்டு டிஜிபி அந்தஸ்துக்கான சீனியாரிட்டி வந்து விட்டது. ஆனால் இதுவரை அவர்களுக்கு டிஜிபி பதவி உயர்வு வழங்கப்படவில்லை. தமிழக காவல் துறைக்கு 3 டிஜிபி பதவிகள் உள்ளனர். ஒன்று சட்டம் ஒழுங்கு, மற்றொன்று தமிழ்நாடு போலீஸ் சீருடைப்பணியாளர் தேர்வாணையம், இன்னொன்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை. இந்த மூன்றிலும் டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் இயக்குநர்களாக நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் தமிழகத்தில் டிஜிபி அந்தஸ்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் எப்போதும்  இருப்பார்கள்.

தற்போது சட்டம் ஒழுங்கு பிரிவிற்கு டிகே ராஜேந்திரனும், சீருடைப்பணியாளர் தேர்வாணையத்துக்கு திரிபாதியும் உள்ளனர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறைக்கு ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள ஜெயந்த் முரளி இயக்குநராக உள்ளார். மற்ற இரண்டு டிஜிபிக்களில் ஒருவரான ஜாங்கிட் மாநில போக்குவரத்துக் கழக மூத்த விஜிலென்ஸ் அதிகாரியாகவும், காந்திராஜன் மாநில மனித உரிமைக்கமிஷனிலும் உள்ளனர்.

1984ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான டிகே ராஜேந்திரன் கடந்த 2017ம் ஆண்டு ஓய்வு பெறவிருந்த நிலையில் அவருக்கு தமிழக அரசு 2 ஆண்டுகள் பணிநீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது. அதனால் அவர் தற்போது டிஜிபி பதவியில் உள்ளார்.

கடந்த 1993ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவியில் சேர்ந்த அசோக்குமார்தாஸ், தாமரைக்கண்ணன் உள்பட 4 ஐஜிக்களுக்கு கடந்த மாதம் ஏடிஜிபி பதவி உயர்வு அளிக்கப்பட்டு விட்டது. அவர்களுக்கு முன்பாக 2004ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகளான செந்தில்வேலன், ஆஸ்ரா கார்க், ஏஜி பாபு, ஜெயகவுரி, செந்தில்குமாரி உள்ளிட்ட 14 எஸ்பிக்களும் டிஐஜி பதவி உயர்வு சமீபத்தில் அளிக்கப்பட்டது. ஆனால் 1986ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகள் 6 பேருக்கும் பதவி உயர்வு இன்னும் அளிக்கப்படாதது அவர்கள் மத்தியில் பெரும் ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக டிஜிபி அலுவலக ஐபிஎஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து ஐபிஎஸ் அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:– ஒரு ஐபிஎஸ் அதிகாரி பதவியேற்று 30 ஆண்டுகள் பணியாற்றினாலே அவர்களுக்கு டிஜிபி பதவி வழங்கப்பட்டு விட வேண்டும். ஆனால் இப்போது உள்ள கால சூழ்நிலையில் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மட்டுமே அந்த பலனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். 1986ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் 6 பேருக்கும் கடந்த 2016ம் ஆண்டே டிஜிபி அந்தஸ்துக்கான சீனியாரிட்டி வந்து விட்டது. அது குறித்து முதல்வரை சந்தித்து முறையிட்டுள்ளனர். அதன் பின்னர் பைல்கள் நகர ஆரம்பித்தன. ஆனால் அதற்கான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பதவி உயர்வு வருவதில் கால தாமதம் ஏற்படுகிறது. கடந்த ஜனவரி மாதமே பதவி உயர்வு வரும் என பேசப்பட்டது ஆனால் அது தண்ணீரில் எழுதியது போல ஆகிவிட்டது. இவ்வாறு தெரிவித்தனர்.