நிச்சயம் செய்த பெண் பலாத்காரம்: மாப்பிள்ளை, மாமியார் கைது

பதிவு செய்த நாள் : 17 ஆகஸ்ட் 2018 23:37

சென்னை,:

திருமணம் செய்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர், வரதட்சணை கேட்டு  திருமணத்துக்கு மறுத்ததால் தாயுடன் கைது செய்யப்பட்டார்.

இது பற்றிய விவரம் வருமாறு:–

சென்னை, அமிஞ்சிக்கரை துரைராஜ் நகரைச் சேர்ந்த மாருதி பிரசாந்தின் மகள் வைஷ்ணவி (வயது 23). பிரசாந்தின் குடும்ப நண்பர் கிஷோர். இவரது அக்காள் மகன் ஆந்திராவைச் சேர்ந்த உதயகுமார் என்பவருக்கு தனது மகள் வைஷ்ணவியை திருமணம் செய்ய பெரியோர்கள் முன்னிலையில் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கிளப்பில் நிச்சயதார்த்தம் நடந்தது. உதயகுமார் பெங்களூருவில் வேலை பார்த்து வந்தார். நிச்சயம் முடிந்ததும் அவர் அங்கே சென்று விட்டார். திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் வைஷ்ணவியும், கிஷோரும் செல்போனில் பேசிப்பழகினர். உதயகுமார் அடிக்கடி சென்னை வந்து வைஷ்ணவியுடன் பீச், பார்க் என்று சுற்றி வந்துள்ளார். நேற்று முன்தினம் 16ம் தேதியன்று திருமணம் செய்ய தேதி குறித்திருந்தனர்.

சென்னை பாரிமுனையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்தனர். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் இருந்து மாப்பிள்ளை உதயகுமார் மற்றும் அவரது அம்மா தனலட்சுமி ஆகியோர் 25 பவுன் நகை மற்றும் ரூபாய் 2 லட்சம் ரொக்கமாக கொடுக்க வேண்டும் என்று பெண் வீட்டில் மிரட்டியுள்ளனர். கேட்ட நகையை தராவிட்டால் திருமணம் நடக்காது என்று தெரிவித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பிரசாந்த் இது குறித்து மாப்பிள்ளை வீட்டில் பேசிய போது வரதட்சணை தராவிட்டால் திருமணம் நடக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதனையடுத்து பிரசாந்த் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாப்பிள்ளை உதயகுமார், அவரது தாய் தனலட்சுமி ஆகியோர் மீது புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. நிச்சயம் நடந்த பிறகு கடந்த மே மாதம் வைஷ்ணவி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உதயகுமார் அங்கு வந்துள்ளார். ‘‘நமக்குத்தான் நிச்சயம் ஆகிவிட்டதே. கணவன் மனைவி ஆகப்போகிறோமே’’ என ஆசை வார்த்தை காட்டி தகாத உறவு கொண்டுள்ளார். மேலும் 100 பவுன் நகைக்கு ஆசைப்பட்டு உதயகுமாருக்கு அவரது தாய் தனலட்சுமி வேறொரு பெண்ணை  திருமணம் செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் உதயகுமார் மீது 376 (கற்பழிப்பு), 294(b) (தரக்குறைவாக பேசுதல்), 417, 506 (1) 4 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.