19 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கூட்டாளிகளுடன் கைது

பதிவு செய்த நாள் : 17 ஆகஸ்ட் 2018 00:10


சென்னை:

19 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சென்னை கேகே நகரில் கூட்டாளிகளுடன் பதுங்கியிருந்த போது போலீசார் கைது செய்தனர். பயங்கர ஆயுதங்கள், கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை, கே.கே. நகர் 102-வது தெருவில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சிலர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தி.நகர் துணைக்கமிஷனர் அரவிந்தன் உத்தரவின் பேரில் கேகே நகர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் அந்த வீட்டை நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சுற்றிவளைத்தனர். அங்கிருந்த கக்கன் நகர், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த நாகூர் மீரான் (வயது 26), ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகர்  குரளரசன் (27), மேற்குமாம்பலம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த வினோத் (27), பூந்தமல்லி  சதீஷ் (38) ஆகிய 4 பேரையும் மடக்கிப் பிடித்தனர். வீட்டை சோதனையிட்டதில் அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் 2 கிலோ எடையுடைய கஞ்சாவையும் மீட்டனர். 4 பேரையும் போலீசார் கைது விசாரணை நடத்தினர்.

நால்வரும் பிரபல ரவுடிகள் என்பதும் சென்னை ஆதம்பாக்கம், சூளைமேடு, குன்றத்தூர், பூந்தமல்லி, வேலூர் ஆகிய இடங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்பு உடையவர்கள் என்பதும் தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளிவந்த இவர்கள் பின்னர் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளனர். நாகூர்மீரான் மீது 19 வழக்குகள் நிலுவையில் உள்ளது. விசாரணைக்குப் பின்னர் நால்வரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.