ஆசை காட்டி பெண்களின் கற்பை சூறையாடிய பலே கார் டிரைவர்

பதிவு செய்த நாள் : 16 ஆகஸ்ட் 2018 01:11


சென்னை:

பெண்களை ஆசை வார்த்தை காட்டி காருக்குள் அழைத்து வந்து காம வேட்டையாடிய பலே டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்களை தனது இச்சைக்கு பலியாக்கியுள்ள பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சென்னை நீலாங்கரை போலீஸ் நிலையத்துக்கு கடந்த மாதம் நடுத்தர வயதுள்ள பெண் ஒருவர் பரபரப்புடன் வந்தார். 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் லிப்ட் கொடுப்பது போல தன்னை காரில் ஏற்றி, மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று கத்தியைக்காட்டி பாலியல் பலாத்காரம் செய்து, நகை, பணத்தை பறித்து சென்றதாகவும் புகார் அளித்தார். ஈசிஆர் ரோட்டில் துணி வியாபாரம் செய்து வந்த அந்த பெண்ணின் புகார் குறித்து நீலாங்கரை இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த நபரின் கார் எண்ணை மட்டும் அந்தப் பெண் போலீசில் கொடுத்திருந்தார். அதன் மூலம் போலீசார் ஈசிஆர் ரோட்டில் கடந்த 15 நாட்களாக தீவிரமாக கண்காணித்தனர். நேற்று முன்தினம் அந்த பதிவெண் கொண்ட காரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். காருக்குள் இருந்த சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச்சேர்ந்த சுரேஷிடம் விசாரணை நடத்திய போது அவர் கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் அடையாறு, திருவான்மியூர், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் பெண்களிடம் காமவேட்டையாடியது தெரிய வந்தது. சாலை யோரமாக நடந்து செல்லும் நடுத்தர வயதைச் சேர்ந்த திருமணமான பெண்களை குறி வைத்து காரில் ஏமாற்றி அழைத்துச் சென்று சுரேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

இது குறித்து சுரேஷ் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் பற்றிய விவரம் வருமாறு:–

கால் டாக்சியில் வாடகை ஓட்டுனராக பணி புரிகிறேன். திருமணமான பெண்கள் மீது எப்போதுமே மோகம் அதிகம். ஈசிஆர் ரோட்டில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நைசாக பேச்சுக் கொடுத்து லிப்ட் தந்து உதவுவது போல நடிப்பேன். சிலர் எளிதில் காரில் ஏறி விடுவார்கள். அவர்களிடம் இரட்டை அர்த்த வார்த்தையில் பேசி என் ஆசையை சூசகமாக தெரிவிப்பேன். சம்மதிக்கும் பெண்களை ஈசிஆர் ரோட்டில் சவுக்குத்தோப்புக்குள் அழைத்துச் சென்று காருக்குள்ளேயை வைத்து அவர்களுடன் உல்லாசமாக இருப்பேன். இந்த சுவை எனக்குப் பிடித்துப் போனதால் அதனை தொடர்ந்தேன். முரண்டு பிடிக்கும் பெண்களை காரை விட்டு இறக்கி விட்டு தப்பித்து விடுவேன். சில பெண்களை வலுக்கட்டாயமாக எனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளேன். அழகான பெண்களை கத்தியைக்காட்டி மிரட்டி பயமுறுத்தி என் ஆசைக்கு பணிய வைப்பேன். கார் கண்ணாடியை ஏற்றி விட்டு முழுவதுமாக ஏசியை ஓடவிடுவேன். பின்னால் அமர்ந்திருக்கும் பெண்ணிடம் சத்தம் போட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டுவேன். அதற்குப் பயந்து போய் ஒரு சிலர் சத்தம் போட மாட்டார்கள். அப்படியே யாராவது சத்தம் போட்டாலும் கண்ணாடிகள் மூடி இருப்பதால் அது வெளியில் கேட்காது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு காருக்குள் வைத்தே அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளேன்.

கடந்த ஓராண்டாக இது போல சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் கைவரிசை காட்டியுள்ளேன். எல்லாம் முடிந்த பின்னர் பெண்கள் அணிந்திருக்கும் நகைகள் அனைத்தையும் பறித்துக் கொள்வேன். இது போன்று பாதிப்புக்குள்ளானவர்கள் மானத்துக்குப் பயந்து போலீசில் புகார் அளிக்காததால் தப்பி வந்தேன். இவ்வாறு சுரேஷ் போலீசிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து சுரேஷ் மீது கற்பழிப்பு, வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணைக்குப்பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில்அடைத்தனர். அவனை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சுரேஷ் குறித்து போலீசார் மேலும் கூறியதாவது: ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஈசிஆர் ரோட்டில் தனியாக நடந்து செல்லும் பெண்களின் அருகில் சுரேஷ் நைசாக காரை நிறுத்துவான். ‘‘எங்கம்மா செல்கிறீர்கள். எனது முதலாளி சுமங்கலி பூஜை நடத்துகிறார். அதற்காக பெண்களுக்கு பட்டுப் புடவையும் ரூ. 10 ஆயிரம் பணமும் தருகிறார். அருகில் தான் அவரது வீடு உள்ளது’’ என்று ஆசை வார்த்தை காட்டுவான். இதனை நம்பி காரில் ஏறும் பெண்களைத்தான் கபளீகரம் செய்துள்ளான். நகையுடன் சேர்த்து கற்பையும் பறி கொடுத்ததால் யாரும் புகார் அளிக்க முன்வராததது சுரேஷூக்கு சாதகமாகப் போய்விட்டது.