கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்

பதிவு செய்த நாள் : 04 ஆகஸ்ட் 2018 01:05


திருநெல்வேலி:

கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் ஜே.சி.பி.,இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தன.

தாமிரபரணி மகாபுஷ்கர விழா ஆக்டோபர் மாதம் 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. இதைமுன்னிட்டு தாமிரபரணி நதிக்கரையில் உள்ள 149 தீர்த்தக்கட்டங்களில் பொதுமக்கள் நீராடுவதற்கு வசதியாக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையி்ல், பாளை.கொக்கிரகுளம் ஆற்றங்கரையின் இரு புறங்களிலும் ஜே.சி.பி.,இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன.  முட்செடிகள் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும், கரையோரங்களில் அடர்ந்து வளர்ந்த முட்புதர்களை சரி செய்யப்பட்டு, குண்டும், குழிகள் சமப்படுத்தப்பட்டன. இதனால் அந்த இடங்கள் ‘பளிச்’ என காணப்பட்டன.

தொடர்ந்து கொக்கிரகுளம் முதல் வண்ணார்பேட்டை பைபாஸ் ரோடு பாலம் வரை இருகரைகளிலும் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.