குழித்துறை நகராட்சி உரக்கிடங்கில் தீ :பல மணிநேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்

பதிவு செய்த நாள் : 04 ஆகஸ்ட் 2018 00:47


மார்த்தாண்டம்,:

மார்த்தாண்டம் அருகே உரக்கிடங்கில் தீப்பற்றி எரிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குழித்துறை நகராட்சிக்குட்பட்ட உரக்கிடங்கு மார்த்தாண்டம் அருகே கீழ்பம்மம் பகுதியில் அமைந்துள்ளது. நகராட்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை உள்ளிட்ட பொருட்கள் அப்பகுதியில் மலை போல குவித்து கொட்டப்பட்டுள்ளது. இதை சுற்றி ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன. இந்த உரக்கிடங்கில் அவ்வப்போது தீப்பற்றி எரிவது வழக்கம். இந்நிலையில், நேற்று பிற்பகலில் உரக்கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. இதனால், அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இது குறித்து பொதுமக்கள் குழித்துறை நகராட்சி அலுவலகத்திற்கும், குழித்துறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவம் இடம் வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி ஒரு வழியாக தீயை அணைத்தனர்.