பைக்கில் சென்ற தாய் – மகன் தண்ணீர் லாரி மோதி பலி

பதிவு செய்த நாள் : 25 ஜூலை 2018 00:10


சென்னை:

சென்னை அண்ணாசாலையில் மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற தாய் – மகன் தண்ணீர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியான சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இது பற்றிய விவரம் வருமாறு:– சென்னை சேத்துப்பட்டு லோகாம்பாள் தெருவைச் சேர்ந்தவர் தட்சினாமூர்த்தி. இவரது மனைவி நிர்மலா (வயது 47). சேத்துப்பட்டு லோகாம்பாள் தெருவில் வசிப்பவர் தட்சிணாமூர்த்தி (56). இவரது மனைவி நிர்மலா (52). இவர்களுக்கு நாகராஜ், மகேஷ் என்ற 2 மகன்களும், ஹேமமாலினி என்ற மகளும் உள்ளனர். நாகராஜ் பி.ஈ பட்டதாரி, மகேஷ் ஐடிஐ முடித்திருந்தார். எம்ஏ பட்டதாரியான ஹேமமாலினிக்கு திருவள்ளூர், கொள்ளுமேட்டைச் சேர்ந்த ஹேமசுராஜ் (எ) சுராஜ் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அடுத்த மாதம் ஆவடியில் உள்ள திருமண மண்டபத்தில் அடுத்த மாதம் 17-ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. இதற்காக தட்சிணாமூர்த்தி குடும்பத்தினர் உறவினர்களுக்கு திருமணப் பத்திரிகை கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் திருவல்லிக்கேணியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டியிருந்தது. இதனால் தனது இளைய மகன் மகேஷை அழைத்துக் கொண்டு டிஸ்கவர் இருசக்கர வாகனத்தில் திருவல்லிக்கேணிக்கு வந்தார்.

அங்குள்ள உறவினர் வீட்டில் பத்திரிகை கொடுத்து விட்டு அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா எதிரில் உள்ள கிளப் ஹவுஸ் ரோட்டில் இருந்து எத்திராஜ் கல்லுாரி நோக்கி எதிர்புறமாக செல்ல முயன்றார்.  அப்போது பூந்தமல்லியில் இருந்து 24 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஏற்றி வந்த டேங்கர் லாரி பின்னி சாலையில் இடது புறமாக திரும்பியது. லாரியை முந்திச் செல்ல முயன்ற போது பைக் மீது லாரி மோதியது. நிலை தடுமாறி கீழே விழுந்த மகேசும், நிர்மலாவும் ரோட்டில் கீழே விழுந்தனர். லாரிக்கு அடியில் சிக்கியதால் டயர் உடலில் ஏறி இறங்கியதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பணியில் இருந்த போக்குவரத்துப்பிரிவு போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்து போன நிர்மலாவின் கணவர் தட்சினாமூர்த்திக்கு போலீசார் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அலறியடித்துக் கொண்டு சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து இருவரது உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். மகள் திருமணத்துக்கு இன்னும் இருபது நாட்களே உள்ள நிலையில் தாய், மகன் விபத்தில் இறந்து போனது தட்சினாமூர்த்தி குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக சென்னை அண்ணாசதுக்கம் போக்குவரத்துப் புலனய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவர் கடலுாரைச் சேர்ந்த பாலச்சந்திரனை கைது செய்தனர்.