எஸ்ஐயால் தாக்கப்பட்ட கல்லுாரி மாணவர்: இன்ப அதிர்ச்சி அளித்த கமிஷனர் விஸ்வநாதன்

பதிவு செய்த நாள் : 24 ஜூலை 2018 00:08


சென்னை:

வாகன சோதனையின் போது எஸ்ஐயால் தாக்கப்பட்ட கல்லுாரி மாணவரின் வீட்டுக்கே நேரில் சென்று  கமிஷனர் விஸ்வநாதன் ஆறுதல் கூறி, நலம் விசாரித்ததால் மாணவரின் குடும்பத்தினர் நெகிழ்ந்தனர்.

சென்னை சூளைமேடு மங்களாபுரத்தைச் சேர்ந்தவர் முகமது ஆரூண் (வயது 19). சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் 3ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். கடந்த 20-ம் தேதி மாலை ராயப்பேட்டையில் நடந்த உறவினரின் திருமணம் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் நண்பர்களுடன் வீடு திரும்பினார். இரவு 11.30 மணி ஆனதால் தன்னுடன் வந்த நண்பரை சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் இறக்கிவிடச் சென்றார். அப்போது சேத்துப்பட்டு ஸ்பர்டங் ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிந்தனர். எஸ்ஐ இளையராஜா மற்றும் காவலர்கள் ஆரூணைத் தடுத்துள்ளனர். வாகனத்தின் ஆவணத்தை காட்டச்சொல்லி இளையராஜா கேட்டார். ஆவணங்களைக் காட்டிய பின்னர் அவர்களை அனுப்பாமல் நிறுத்தி வைத்திருந்துள்ளனர். இதனையடுத்து தன்னை ஏன் நிறுத்தி வைத்துள்ளீர்கள், ஆவணங்களைத்தான் காட்டி விட்டேனே காலையில் 8 மணிக்கு கல்லுாரிக்கு போகவேண்டும் என்னை அனுப்புங்கள் என்று கூறியுள்ளார்.

அதற்கு எஸ்ஐ இளையராஜா உன் மீது சந்தேகம் உள்ளது, நட ஸ்டேஷனுக்கு என்று மிரட்டியுள்ளார்.

அப்போது எஸ்ஐ இளையராஜா மற்றொரு வாகன ஓட்டியை மிரட்டி பணம் வாங்கியதாக தெரிகிறது. “நான் வேண்டுமானால் எனது வாகனத்தை விட்டு செல்கிறேன். காலையில் வந்து ஒரிஜினல் ஆவணத்தைக் காட்டி எடுத்துக் கொள்கிறேன்’’ என்று சொன்னவர் ஆரூணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அவர் தர மறுத்ததால் கடுமையான கோபமடைந்த எஸ்.ஐ. இளையராஜா ஆரூணின் கன்னத்தில் அறைந்து லத்திக்கம்பால் விரட்டித் தாக்கியுள்ளார். இதில் கல்லுாரி மாணவர் பலத்த காயமடைந்தார். பின்னர் அவரை மிரட்டி அங்கிருந்து செல்ல எஸ்ஐ அனுமதித்துள்ளார். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதியாகி சிகிச்சை பெற்ற ஆரூண் இது குறித்து கமிஷனர் விஸ்வநாதனிடம் புகார் அளித்தார். மனித உரிமை கமிஷனிலும் அது குறித்து புகாரும் அனுப்பினார். இந்த சம்பவம் வாட்ஸ்ஆப் மூலம் வைரலாக பரவியது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதில் எஸ்ஐ மீது தவறு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து எஸ்ஐ இளையராஜாவை உடனடியாக சஸபெண்ட் செய்து விஸ்வநாதன் உத்தரவிட்டார். காவலர்கள் தாக்கியதால் மனம் உடைந்திருந்த கல்லுாரி மாணவர் ஆரூணின் வீட்டுக்கு கமிஷனர் விஸ்வநாதன் நேரில் சென்றார். இதனைக் கண்ட ஆரூணின் குடும்பத்தார் இன்ப அதிர்ச்சியடைந்தனர். ஆருணிடம் நலம் விசாரித்த அவர் நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார். பின்னர் எதற்கும் வருத்தப்படவேண்டாம், படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்று கூறிவிட்டு கிளம்பினார். கமிஷனரின் மனிதநேயத்தை கண்டு ஆரூணின் குடும்பத்தார் அகம் மகிழ்ந்தனர்.