சினிமா பாணியில் விரட்டிப்பிடித்த போலீஸ் காஸ்டபிள்: கமிஷனர் பாராட்டு

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2018 00:51


சென்னை,:

ரோட்டில் நடந்து சென்ற பயணியிடம் செல்போன் பறித்த திருடன் தாவித்தாவி தப்பியோடினான். அவனை விடாமல் விரட்டிப் பிடித்த போலீஸ் கான்ஸ்டபிளை கமிஷனர் விஸ்வநான் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, தென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 56). நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் ரயில் மூலம் சென்னைக்கு வந்த அவர் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து இறங்கினார். அங்கிருந்து மூலக்கடையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் உள்ள பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென மணியின் பாக்கெட்டில் இருந்த செல்போனை பிடுங்கிக் கொண்டு ஓடினார். அதிர்ச்சியடைந்த மணி திருடன் திருடன் என கூச்சலிட்டார்.

அப்போது அங்கு பூக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவருடன் ரோந்துப் பணியில் இருந்த ஜீப் டிரைவர் இரண்டாம் நிலை காவலர் அகமது உசேன் மணியிடம் செல்போனை பறித்த வாலிபரை விரட்டிச் சென்றார். அப்போது திருடன் சென்ட்ரல் சிக்னல் கடந்து, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பூங்கா ரயில் நிலையம் நோக்கி ஓடினார். அவரை அகமது உசேன் விடாமல் விரட்டிச் சென்றார். அப்போது திருடன் பூங்கா ரயில் நிலையம் அருகே, எதிர் திசையில் சாலை நடுவே இருந்த தடுப்பை சினிமா பாணியில் தாண்டி குதித்து பாரிமுனை நோக்கி செல்லும் அரசு பஸ்சுக்குள் தாவி ஏறினான். இதனைக் கண்ட காவலர் அகமதுஉசேனும் அவனைப் பிடிப்பதற்காக பஸ்சில் ஏறினார். இதனைக் கண்ட திருடன் உடனே பஸ்சின் முன்பக்கம் வழியாக இறங்கி பாரிமுனை செல்லும் திசை நோக்கி ஒடினார்.

காவலர் அகமது உசேனும் பேருந்திலிருந்து இறங்கி ஓடி சிறிது தூரத்தில் செல்போன் திருடனை மடக்கிப் பிடித்தார். அவனிடமிருந்த மணியின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். அவனைப் பிடித்து வந்து பூக்கடை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் பெயர் மஞ்சு (வயது 28). தர்மபுரம், பெண்ணகரம், எட்டுக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சென்னை வந்த அவர் ஊருக்கு செல்வதற்கு பணம் இல்லாததால் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர். செல்போன் பறிப்பு குற்றவாளியை துணிச்சலாக விரட்டிச்சென்று பிடித்த அகமது உசேனை போலீஸ் கமிஷனர் விசுவநாதன் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.