திருநெல்வேலி:
நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் கோலாகலமாக நடந்தது.
நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும்திருவிழாக்களில் ஆடிப்பூர திருநாள், வளைகாப்பு வைபவம் முக்கியமானது. இந்த ஆண்டு கோயிலில் அம்மன் சந்நிதியில் ஆடிப்பூரத் திருநாள் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நான்காம் திருநாளான நேற்று கம்பர் சமுதாயம் சார்பில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தது.
பெண்கள் பூஜை பொருட்களுடன் அம்பாள் உட்பிரகாரத்தில் நாதஸ்வர இன்னிசையுடன் வலம் வந்து சுவாமியை தரிசித்து ஊஞ்சல் மண்டபம் வந்தனர். பின்னர் காந்திமதி அம்பாளுக்கு பச்சை நிற பட்டுச்சேலை,
வளையல்கள் அணிவித்து பட்சணங்கள் கொண்டு மடி நிரப்பி தீபாராதனை, சிறப்பு வழிபாடு நடந்தது. குடும்ப நலன் வேண்டி பெண்கள் வளையல்களை காணிக்கையாக செலுத்தினர். சுற்றுப்பகுதி மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
இரவில் காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் நான்கு ரத வீதிகளில் உலா நடந்தது. கம்பன் அறக்கட்டளை சார்பில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மார்க் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கம்பர் சமுதாய மாநிலத் தலைவர் ரவீந்திரன், பொதுச் செயலாளர் சங்கரன், பொருளாளர் மாடசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் சங்கரலிங்கம், பிச்சப்பா கம்பர் அறக்கட்டளை செயலாளர் காளியப்பன், பொருளாளர் பத்மநாபன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
10ம் திருநாளான 17ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைக்கட்டுத் திருநாள் நடக்கிறது.