முட்டத்தில் நீலப்புரட்சி திட்டம்:மீன்பிடி உபகரணங்கள் வழங்கல்

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2018 00:46


மணவாளக்குறிச்சி:

முட்டத்தில் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.

மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மீனவர்களுக்காக நீலப்புரட்சி என்னும் திட்டம் புதிதாக துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஒரு மீனவருக்கு பைபர் வள்ளம், இன்ஜின், வலை மற்றும் ஐஸ் பாக்ஸ் ஆகிய உபகரணங்கள் ரூ.4.25 லட்சம் செலவில் வழங்கப்படுகிறது. இதில் ௫௦ சதவீதத்தை மத்திய மாநில அரசுகள் மானியமாக வழங்குகின்றன. இதை மீனவர் கூட்டுறவு இணையம் வாயிலாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் நுாறு பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் குமரி மாவட்டத்தில் 22 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் முட்டம் தனியார் மீன்பிடித் துறைமுகத்தில்  தொழில் செய்யும் ஐந்து மீனவர்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா முட்டத்தில் நடந்தது.  மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குநர்(பொறுப்பு) நடராஜன் முன்னிலை வகித்தார். மாநில மீனவர் கூட்டுறவு இணையத் தலைவர் சேவியர் மனோகரன் உபகரணங்கள் வழங்கினார். கன்னியாகுமரி மீன்வளத்துறை உதவி இயக்குநர் தீபா, குளச்சல் உதவி இயக்குநர் அஜித் ஸ்டாலின், மாவட்ட திட்ட அலுவலர் பிரின்ஸி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் டைமன் அருள், அமலதாஸ், சூசைவியாகுலம், ஜோசப், தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.