இயக்குநர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் குடிபோதையில் கார் ஓட்டி சிக்கினார்

பதிவு செய்த நாள் : 07 ஜூலை 2018 01:11


சென்னை:

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் குடிபோதையில் கார் ஓட்டி போக்குவரத்து போலீசாரிடம் சிக்கினார். அவரது காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ். நடிகரான இவர் தாஜ்மகால் உள்ளிட்ட தமிழ்படங்களில் நடித்துள்ளார். கேரளா நடிகையை காதல் திருமணம் செய்து அங்கேயே செட்டிலாகி விட்டார். சென்னை சேத்துப்பட்டில் தனக்கு சொந்தமான பிளாட்டில் வசித்து வருகிறார். நேற்று மதியம் நுங்கம்பாக்கம் போலீசார் ஸ்டெர்லிங் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த பிஎம்டபிள்யூ காரை மடக்கினர். காரை ஓட்டி வந்தது நடிகர் மனோஜ் என தெரியவந்தது. அவரது முகத்தில் பிரெத் அனலைசர் வைத்து போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவர் மது அருந்தியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடிகர் மனோஜ் மீது வழக்குப் பதிவு அவரது காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தனது டிரைவிங் லைசென்ஸ் மற்றும் காரின் ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்களை போலீசாரிடம் நடிகர் மனோஜ் சமர்ப்பித்தார்.  கோர்ட்டில் அதற்கான அபராதத்தை செலுத்தி விட்டு காரை பெற்றுக் கொள்ளும்படி போலீசார் அறிவுறுத்தினர். இதனையடுத்து மனோஜ் வேறு காரை வரவைத்து அதில் ஏறி வீட்டுக்கு சென்றார். நடிகர்கள் குடித்து விட்டு கார் ஓட்டி போலீசில் சிக்குவது தற்போது சகஜமாகி விட்டது. கடந்த ஆண்டு குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டியதாக நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்விஜய் மற்றும் நடிகர் ஜெய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களையடுத்து நடிகர் மனோஜ் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.