சேர்வலாறு அணையில் தேக்கிவைத்த தண்ணீரை திணறல்

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2018 11:44


விக்கிரமசிங்கபுரம்:

சேர்வலாறு அணையில் தேக்கி வைத்த நீரை எந்த வகையில் பயன்படுத்த என்று தெரியாமல் சம்பந்தப்பட்ட துறையினர் திணறி வருகின்றனர்.

மின்சாரம் உற்பத்திக்காக, 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை 1986ம் ஆண்டு கட்டப்பட்டது. அணை கட்டப்பட்டு சுமார் சுமார் 30 ஆண்டுகள் ஆன நிலையில், அணையில் ஆங்காங்கே நீர் கசிவு ஏற்பட்டதால், அணையை பராமரிக்க சம்பந்தப்பட்ட துறையினர் முடிவு செய்தனர்.

இத்துடன் அணையை புனரமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக உலக திட்டத்தின் சார்பில் அணையின் கசிவுகளை அடைக்கவும், அங்குள்ள மின் உற்பத்தி நிலையத்தை சீரமைக்கவும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, கடந்த சுமார் ஒரு ஆண்டிற்கும் மேலாக சேர்வலாறு அணை புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் அணையில் தண்ணீர் தேங்கி நின்றால் அணை  புதுப்பித்தல் மற்றும் புனரமைக்கும் பணி செய்ய முடியாது என்பதால் கடந்த ஒரு ஆண்டில் சுமார் இரண்டு முறைக்கும் மேலாக சேர்வலாறு அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் திறந்து விடப்பட்டது.

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் விவசாயத்திற்கு பாபநாசம் அணை மற்றும் சேர்வலாறு அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் பெருமளவில் பயன்பட்டு கொண்டிருக்கும் நிலையில், சேர்வலாறு அணையில் நடக்கும் புனரமைக்கும் பணியை காரணம் காட்டி தண்ணீர் திறந்து விடப்பட்டது மாவட்ட விவசாயிகளிடம் பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அப்போதைய மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று கொண்ட கலெக்டர் சேர்வலாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று அப்போது உத்தரவிட்டார். ஆனாலும் அணையில் பணி நடக்க வேண்டுமென்றால், அணையில் தண்ணீரை தேக்கி வைக்கக்கூடாது என்ற நிலை இருந்ததால் அவ்வப்போது அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில் சேர்வலாறு அணை புனரமைப்பு பணி பெருமளவில் முடிந்து விட்டதால் அணையின் உள் சுவரில் சீட் ஒட்டும் பணி பாதி நிறைவடைந்திருக்கிறது.

கடந்த சுமார் 10 நாட்களாக காற்றுடன் பெய்து வந்த மழையால் அணையின் மீதமுள்ள சீரமைப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அணையில் தண்ணீரை தேக்கி வைத்தனர். தண்ணீர் தேக்கி வைத்த நிலையில், வரும் கார்சாகுபடிக்கு அணையின் தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம் என்று விவசாயிகள் எண்ணியதால், சேர்வலாறு அணையிலிந்து தண்ணீரை திறந்துவிடக்கூடாது என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.

சேர்வலாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டால், எதற்கும் பயன்படாமல் கடலுக்கு செல்லும் என்பதால், கடந்த சனிக்கிழமையன்று அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதாக தெரிகிறது.

இதனால் அன்றைய தினம் இரவில் சேர்வலாறு அணை மூடப்பட்டது. அணை மூடப்பட்ட நாளில் சுமார் 20 அடியாக இருந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம், தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக நாளுக்கு நாள் அதிகரித்து நேற்று காலை 104.07 அடியானது.

இந்நிலையில் சேர்வலாறு அணையில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அதிகமாக தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டதால், அணையில் பணிகள் நடைபெறாமல் இருக்கிறது.

அணையின் பணியை முடிக்கவேண்டும் என்று அணை புனரமைப்பு துறையினர் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்ற மாவட்ட நிர்வாகத்தின் உத்திரவால் சேர்வலாறு அணை தண்ணீரை என்ன செய்ய என்று சம்பந்தப்பட்ட துறையினர்கள் திணறி வருகின்றனர்.