கன்னியாகுமரியில் திருப்பதி கோயிலில் விரைவில் மகாகும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2018 11:36


கன்னியாகுமரி:

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் அமைக்கப்பட்டு வரும் திருமலை திருப்பதி கோயில் மகாகும்பாபிஷேகம் விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக திருமலை திருப்பதி தேவஸ்தான சென்னை கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் திருப்பதி கோயில் பணிகள் நடந்து வருகிறது. இந்த திருப்பணிகளை பார்வையிட்ட தேவஸ்தான நிர்வாகிகள் ரவிபாபு, மோகன்ராவ், செல்லபதி, ராமராவ், சந்திரசேகர், ராஜேந்திரன், ரங்காரெட்டி, சுவாமி பத்மேந்திரா, கேந்திர பொருளாளர் ஹனுமந்த்ராவ் உள்ளிட்டோர் தற்போது நடந்து வரும் பணிகளை பார்வையிட்ட பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது; -

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் 24 கோடி கோடிரூபாய் மதிப்பீட்டில் திருமலை திருப்பதி கோயில் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை சென்னை ஆலோசனை மைய குழுவை சேர்ந்தவர்கள் பார்வையிட்டுள்ளோம். இதுவரை நடந்துள்ள கட்டுமான பணியின் நிலவரம், தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகள் போன்ற முழுவிபரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தான முக்கிய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும். மேலும் தற்போது நடந்துள்ள பணிகள் தவிர இன்னும் சேர்க்க வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்படும். கோவில் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு சுபமுகூர்த்த தினம் பார்க்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்படும். அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடந்த பணிகள் துரிதபடுத்தபட்டுள்ளது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதல்வர், ஆந்திரமுதல்வர், தமிழக கவர்னர், மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் திருப்பதி கோயில் மீது பற்றுள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். இது பொதுமக்களுக்கான கோயில்.    இந்த கோயிலில் வேலை வாங்கி தருவதாக கூறி யாராவது பணம் வாங்குவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கோயில் பணிகளுக்காக நிறைய பணியாளர்கள் தேவைப்படுவார்கள். அப்போது முறையாக அறிவிப்பு வெளியிட்டு தேர்வு செய்யபடுவார்கள். கோயிலுக்கு வருவதற்கு தற்போது கேந்திரா வழியாக வரலாம். அதற்கு கேந்திர நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்குகிறது. ஆனால் கோயிலுக்கு புதிய சாலை அமைக்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் தங்குமிடம் விரைவில் கட்டப்பட உள்ளது. அதேபோல கோயில் மூலஸ்தானத்தில் அமைய உள்ள வெங்கடாஜலபதி சுவாமி சிலை, தேர் மற்றும் பிற சுவாமி சிலைகள் ஏற்கனவே பணி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து திருப்பதி வரை புதிய ரயில் இயக்கும் திட்டம் அரசுக்கு உள்ளது. கோயிலில்  கொடிமரத்தின் உயரம் காற்றின் வேகம் காரணமாக குறைக்கப்பட்டுள்ளது.  நாளை காலை  (இன்று ) திருப்பதி கோயில் தலைமை அர்ச்சகர்கள் மற்றும் குருக்கள் வருகின்றனர். அவர்களும் திருப்பணிகளை பார்வையிடுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

  ஜூலை  11ம் தேதி மகா கும்பாபிஷேகம் ?

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடந்து வரும் திருமலை திருப்பதி கோவில் மகாகும்பாபிஷேகம் அடுத்த மாதம்  (ஜூலை ) நடந்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது என்று கூறப்படுகிறது. ஜூலை 6-ம்தேதி யாகசாலை பூஜை தொடங்கப்பட்டு 11ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது என்றும் அதற்கு முன்பு இதுவரை நடந்துள்ள பணிகளை பார்வையிடுவதற்கும் கும்பாபிஷேக பணிகளை நடத்துவதற்கும் இன்று முக்கிய அர்ச்சகர்கள் குழு வருகிறது. தற்போது கோயிலில் உள்பகுதியில் பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றுள்ளது.கோயில் ஊழியர் குடியிருப்பு, புஷ்கரணி, மாடவீதி போன்ற பணிகள் தொடங்கப்படவில்லை. அந்த பணிகள் உடனடியாக துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.