எஸ்டேட் கண்காணிப்பாளரை கடித்துக் குதறிய கரடிகள்

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2018 11:35


தக்கலை,:

தடிக்காரன்கோணம் அருகே மாறாமலை எஸ்டேட் மேலாளரை கரடிக் கூட்டம் கடித்து குதறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்ட மலைப்பகுதிகளில் ஏராளமான ரப்பர், கிராம்பு, தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்தத் தோட்டங்களில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பங்களுடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், தடிக்காரன்கோணம் கீரிப்பாறை அருகேயுள்ள மாறாமலை எஸ்டேட்டில் நேற்று அதிகாலை அசம்பாவிதம் சம்பவம்  நடந்தது. தனியாருக்குச் சொந்தமான இந்த எஸ்டேட்டில் புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு மேலகோட்டையைச் சேர்ந்த ஞானசேகர் கண்காணிப்பாளராக  பணியாற்றி வருகிறார். இவர் தன் மனைவி சித்திரவல்லி மற்றும் 2 குழந்தைகளுடன் எஸ்டேட் பகுதியிலேயே வசித்து வருகிறார். இவர் எஸ்டேட்டில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை தனது பைக்கில் அழைத்துச் செல்வது வழக்கம்.

வழக்கம்போல் நேற்று அதிகாலை காலை 6.15 மணியளவில் அச்சங்காட்டிலிருந்து மாறாமலை எஸ்டேட்டிற்கு தொழிலாளர்களை அழைத்து வருவதற்காக அவர் பைக்கில் சென்றார். அவர் செல்லும் வழியில் திடீரென 4 கரடிகள் ஒன்றிணைந்து அவரை வழி மறித்து தாக்கியுள்ளன. எதிர்பாராத இந்தத் தாக்குதலால் ஞானசேகர் நிலைகுலைந்தார். கரடிகள்  அவரை கடித்து குதறின. இதில் அவரது கண்கள் சேதமடைந்தன. ஒரு கண் கிழிந்து வெளியே வந்தது. அவர் வேதனையால் அலறி துடிக்கவே சத்தம் கேட்டுவந்த ஏனைய தொழிலாளர்கள் கரடி கூட்டத்தை விரட்டியடித்து அவரை மீட்டனர். அவரை ஆம்புலன்ஸ் வழி சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாறாமலையில் கரடிக் கூட்டம் ஞானசேகர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் மலையோர தொழிலாளர்களை மட்டுமின்றி குமரி மாவட்ட மக்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குமரி மாவட்ட வனப்பகுதியையொட்டி மக்களின் வாழ்விடங்கள் உள்ளன. பள்ளி, ஆஸ்பத்திரி, வீடுகள் உள்பட ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மக்கள் வாழக்கூடிய பகுதிகளை வனவிலங்கு சரணாலயமாக மாற்றக்கூடாது என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இது சம்பந்தமாக பொதுமக்களை ஒன்று திரட்டி சாலை மறியல் நடத்தபோவதாகவும் தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயராம் தெரிவித்தார்.