ஒரே நாளில் 15 பேரிடம் வழிப்பறி * 30 நாட்களில் 36 கொள்ளை சம்பவங்கள்

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2018 01:25


சென்னை:

சென்னை வழிப்பறி நகரமாக மாறி வருவதால் நகர மக்கள் வெளியில் வரத் தயங்குகின்றனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 15 வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. 30 நாட்களில் 36 கொள்ளைச்சம்பவங்கள் நடந்துள்ளன. இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினால் மட்டுமே இந்த வழிப்பறிக் கொள்ளையர்களை கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சென்னை நகரில் நாளுக்கு நாள் வழிப்பறி சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது. ஒருபக்கம் கண்களில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு போலீசார் ரோந்து சுற்றி கொள்ளையர்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும் மறுபக்கம் வழிப்பறிக் கொள்ளையர்கள் செல்போன் மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சென்னை நகரில் பகலில் வெளிவருவதற்கே பெண்கள் அச்சப்படுகின்றனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் நடந்த 15 வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் பிளவர்ஸ் சாலையில் வசித்து வருபவர் சந்திரபிரகாஷ். புரசைவாக்கம் அழகப்பா சாலை அருகே கால் டாக்சிக்காக காத்திருந்த போது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் சந்திரபிரகாஷின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். இது குறித்து வேப்பேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புரசைவாக்கம் தாணா தெருவைச் சேர்ந்த லீலா ஜெயின் (53) நேற்று முன்தினம் இரவு தாணா தெருவில் பழக்கடையில் பழம் வாங்கி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பைக்கில் வந்து லீலா ஜெயின் கையில் இருந்த பணப்பையை பறித்துச் சென்றனர். அதற்குள் செல்போன், ரூ. 1,000 இருந்தது. இதே போல மண்ணடியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் முகமது பஷீர் என்பவர் வேப்பேரி ஐரோட்டில் நடந்து சென்ற போது அவரது செல்போனை மர்ம நபர்கள் பைக்கில் வந்து பறித்துச் சென்றனர்.

விழுப்புரம் செஞ்சியைச் சேர்ந்த கால்டாக்சி டிரைவர் பெருமாள் (32) என்பவரிடம் கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா அருகில் நடந்து சென்ற போது 2 பேர் அவரிடமிருந்த செல்போனை பறித்தனர். மேலும் கோயம்பேடு நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த கீமிகாஷா, அரும்பாக்கத்தைச் சேர்ந்த வங்கி ஊழியர் அய்யப்பன் ஆகியோரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி தங்க பிரேஸ்லட், பணம் ரூ. 300 ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இதே கும்பல் அரும்பாக்கத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் கைப்பையை பறித்து சென்றனர்.

மேலும் கொளத்தூர் ஆட்டோ டிரைவர் சரவணனிடம் சிந்தாதிரிப்பேட்டை மே தினப்பூங்கா அருகிலும், அயனாவரம் கார்த்திக் மாரிமுத்துவிடம் நியூ ஆவடி சாலையிலும், கோவிலம்பாக்கம் சரவணனிடம் அசோக் நகரில் வைத்தும், அரும்பாக்கம் பிரபு, தமிழரசன் ஆகியோரிடம் சூளைமேட்டில் வைத்தும், அயனாவரம் பானுவிடமும், பீகாரைச் சேர்ந்த அபுதீஷ்குமார் (30) என்ற கார்பெண்டரிடம் திருமங்கலம் 200 அடி சாலையில் வைத்தும் செல்போன்களை பறித்துச் சென்றனர். மேலும் விருகம்பாக்கம் சரண்யா (27) விருகம்பாக்கம் மெயின் ரோடு தாராதாசந்த் நகரில் நடந்து சென்ற போது  மர்ம நபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்து கொண்டு ஓடி விட்டனர். தரமணி ஸ்ரீராம் நகர் காலனியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (22) என்பவர் கடலூரில் இருந்து சென்னை மத்திய கைலாஷ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரை கத்தியால் வெட்டி செல்போன், பணத்தை பறிக்க முயன்றனர். சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிவந்தனர். உடனே கொள்ளையர்கள் தப்பி ஓடினர். இது குறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த விக்னேஷ் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மட்டும் 15 இடங்களில் பேரிடம் செல்போன், நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கத்தியைக்காட்டி மிரட்டி மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அதே போல கடந்த மே மாதம் 3 ம்தேதி முதல் ஜூன் மாதம் 9ம் தேதிவரை 21 வழிப்பறிக் கொள்ளைகள் தொடர்பாக போலீஸ் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இந்த வகையில் ஒரே மாதத்தில் 36 கொள்ளை வழக்குகள் பதிவாகியிருப்பது சென்னை போலீசார் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.