நெல்லை டிஐஜி, தென்மண்டல ஐஜி அதிரடி மாற்றம்: புதிய ஐஜியாக சண்முகராஜேஸ்வரன் நியமனம்

பதிவு செய்த நாள் : 10 ஜூன் 2018 01:25


சென்னை:

நெல்லை டிஐஜி, தென்மண்டல ஐஜி ஆகியோர் உட்பட 11 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சண்முக ராஜேஸ்வரன் புதிய ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசின் உள்துறைச் செயாலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:–

ஐஜியாக பதவி உயர்வு பெற்று காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த மனோகரன் திருப்பூர் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். சமூகநீதி, மனித உரிமைக்கமிஷன் டிஐஜி ஜெ. பாஸ்கரன், பதவி உயர்த்தப்பட்டு ஆபரேஷன்ஸ் பிரிவு ஐஜியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். திருப்பூர் போலீஸ் கமிஷனராக இருந்த நாகராஜன் பயிற்சி ஐஜியாகவும், அங்கு இருந்த சண்முகராஜேஸ்வரன் தென்மண்டல ஐஜியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். தென்மண்டல ஐஜியாக இருந்த சைலேஷ்குமார் யாதவ் சென்னை ஆயுதப்படை ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். காவலர் நலன் ஐஜி டேவிட்சன் தேவஆசீர்வாதம் மதுரை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த மகேஷ்குமார் அகர்வால் சிபிசிஐடி சிறப்பு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை தலைமையிட கூடுதல் போலீஸ் கமிஷனர் சேஷசாயி காவலர் நலன் ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். குற்றப்பிரிவு டிஐஜி என். பாஸ்கரன் தமிழ்நாடு போலீஸ் அகாடமி டிஐஜியாகவும், டெக்னிக்கல் சர்வீஸ் டிஐஜி மகேந்திரகுமார் ரத்தோட் நெல்லை டிஐஜியாகவும் (கமிஷனர் பொறுப்பு), பயிற்சி டிஐஜி ஆசியம்மாள் டெக்னிக்கல் சர்வீஸ் டிஐஜியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். நெல்லை டிஐஜியாக இருந்த கபில்குமார் சரத்கர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த போது உயரதிகாரிகள் யாரும் ஸ்பாட்டில் இல்லை என்றும், சம்பவ இடத்தில் இருந்த கீழ்மட்ட லெவலில் இருந்த அதிகாரிகள் சுயமாக முடிவெடுத்து துப்பாக்கி சூட்டை நடத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் வெளியாகின. இதனையடுத்து நெல்லை, துாத்துக்குடியில் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளான தற்போது திருச்சி ஐஜியாக உள்ள வரதராஜூ, பயிற்சி ஐஜி சண்முகராஜேஸ்வரன், வடக்கு மண்டல ஐஜி ஸ்ரீதர் மற்றும் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் ஆகியோர் கடந்த 15 நாட்களாக துாத்துக்குடிக்கு சிறப்பு பணிக்காக அனுப்பப்பட்டனர். அவர்கள் அங்கு சிறப்பு முகாமிட்டு கலவரத்தை எப்படி கையாள்வது என்பது குறித்து தீவிர ஆலோசனை வழங்கி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வரதராஜு, சண்முகராஜேஸ்வரன் ஆகியோர் கடந்த 1990ம் ஆண்டு துாத்துக்குடியில் டிஎஸ்பியாக பணியாற்றிய போது அங்கு ஜாதிக்கலவரம் வெடித்தது. எஸ்பி ஜாங்கிட் தலைமையில் இரவு பகலாக இருவரும் விழிப்புடன் பணியாற்றி பிரச்சினையை இருவரும் திறமையாக கையாண்டனர். ஆகவே இந்த இருவரில் யாரை தென்மாவட்ட ஐஜியாக நியமிப்பது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிஜிபி ராஜேந்திரனுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து சண்முகராஜேஸ்வரன் தென்மாவட்ட ஐஜியாக நியமித்து தமிழக அரசு நேற்று உத்தரவிடப்பட்டது.

சட்டம் ஒழுங்கு பணியில் பழுத்த அனுபவம் வாய்ந்த சண்முகராஜேஸ்வரன் எம்பிஏ, எம்பில் மற்றும் பிஎல் பட்டதாரியாவார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் சென்னை அடையாறு, மயிலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் துணைக்கமிஷனராக பணியாற்றினார். பின்னர் பதவி உயர்ந்து நெல்லை டிஐஜியாக 2 ஆண்டுகள் இருந்தார். அதன் பின்னர் தென்சென்னை இணைக்கமிஷனரான அவர் கடந்த 2016ம் ஆண்டு ஐஜியாக பதவி உயர்வு பெற்றார்.