சி.பி.எஸ்.இ.க்கு இணையாக தமிழக பாட திட்டத்தை மாற்றக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு

பதிவு செய்த நாள் : 07 மே 2018 19:29

சென்னை,

 நீட் போன்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாடத் திட்டத்தை சிபிஎஸ்இ மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு இணையாக மேம்படுத்தக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் மார்ட்டின் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தேசிய அளவில் நடத்தப்படும் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளுக்கும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் போன்ற போட்டித் தேர்வுகளுக்கும், மத்திய அரசு பாடத் திட்டங்களான சிபிஎஸ்இ மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாட திட்டங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.
தமிழக பாட திட்டத்தின் கீழ் நன்றாக படிக்கும் மாணவர்களால், இந்த போட்டித் தேர்வுகளில்

வெற்றிபெற முடியவில்லை. இதனால், தேசிய அளவிலான தகுதித் தேர்வு, போட்டித் தேர்வுகளில் முன்னிலை பெற முடியாத நிலைக்கு தமிழக மாணவர்கள் ஆளாக்கப் படுகின்றனர்.   

இந்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன், சேஷசாயி ஆகியோர் முன்பு  விசாரணைக்கு வந்தபோது, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகள் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக, தங்களது மாநில பாடத்திட்டத்தை மேம்படுத்தி உள்ளது. இதேபோல, தமிழக பாடத் திட்டத்தை மேம்படுத்த கோரியபோது, அது மாநில அரசின் கொள்கை சார்ந்த விசயம் என்பதால் எவரின் ஆலோசனைகளும் தேவையில்லை என பதிலளித்ததாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

       இதையடுத்து, இம்மனு குறித்து பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை கோடை விடுமுறைக்கு பின்னர், தள்ளி வைத்தனர்.