போலீசாரால் தேடப்பட்டு வந்த “ராக்கெட் ராஜா” சென்னையில் துப்பாக்கியுடன் கைது

பதிவு செய்த நாள் : 07 மே 2018 19:07

சென்னை, 

நெல்லை கல்லுாரி பேராசிரியர் கொலை வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த நெல்லையைச் சேர்ந்த ராக்கெட் ராஜாவை சென்னை நட்சத்திர ஓட்டலில் வைத்து போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் கத்தி, அரிவாள்கள் போன்ற ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி, கொடியன்குளத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 50) அ.தி.மு.க.பிரமுகர்.  பாளையங்கோட்டையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். பாளை வி.எம்.சத்திரத்தில் உள்ள ஒரு நிலம் தொடர்பாக இவருக்கும் டாக்டர் பாலமுருகன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து எதிர்தரப்பினர் குமாரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி காலை பாளையங்கோட்டை அண்ணா நகரில் உள்ள குமார் வீட்டில் ஒரு கும்பல் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. குமார் அப்போது வீட்டில் இல்லாததால் அவரது மருமகனும்,

நெல்லை பொறியியல் கல்லூரி பேராசிரியரான செந்தில்குமாரை வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக ராக்கெட் ராஜா, அவரது சகோதரர் வக்கீல் பாலகணேசன், டாக்டர் பாலமுருகன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் 8 பேர் கைது செய்யப்பட்டார்கள். ராக்கெட் ராஜா, பாலமுருகன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வந்த‌னர். ராக்கெட் ராஜா தொடர்ந்து தலைமறைவாகவே இருந்துவந்தார். நெல்லை போலீசாருடன் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசாரும் ராக்கெட் ராஜா உள்ளிட்ட 3 பேரை தேடிவந்தனர். அவர் மும்பைக்கு சென்று பதுங்கி விட்டதால் அவரை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் ராக்கெட்ராஜா சென்னையில் உள்ள ஒரு பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியிருப்பதாக தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தி.நகர் துணைக்கமிஷனர் அரவிந்தன் தலைமையில் தனிப்படை போலீசார் மற்றும் ஓசிஐயூ போலீசாரும் நேற்று அதிகாலை 6 மணியளவில் ஓட்டலை சுற்றிவளைத்தனர். ஒட்டலில் 9வது மாடியில் தங்கியிருந்த ராக்கெட் ராஜாவை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 எம்எம் ரக கைத்துப்பாக்கி, தோட்டாக்கள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவருடன் தங்கியிருந்த மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த நந்தா என்கிற நந்தகோபால் (43), நெல்லை வடக்கு பாலபாக்கியம் நகரைச் சேர்ந்த சுந்தர் (31), பிரகாஷ் (25), பாளையங்கோட்டை திருநகர் என்ஜிஓ காலனியைச் சேர்ந்த சுந்தர் (23) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். ராக்கெட் ராஜாவிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி முறைப்படி லைசென்ஸ் பெறப்பட்டுள்ளது. ஆனால் அது வேறு ஒரு தொழிலதிபரின் பெயரில் உள்ளது. அது திருடப்பட்டதா அல்லது அவரிடம் பாதுகாப்புக்காக ராக்கெட் ராஜா வாங்கி வந்தாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மும்பையில் இருந்து சென்னை வந்த ராஜா சென்னையில் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. அது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வரும் ராமநாதபுர சமஸ்தான சேதுபதி மகாராஜாவின் வாரிசு கார்த்திக் சேதுபதியை கொலை செய்வதற்காக ராக்கெட் ராஜா சென்னை வந்தார்.  ஏற்கனவே கார்த்திக் சேதுபதியை நெல்லைக்கு கடத்திச் சென்ற வழக்கில் சுந்தர், பிரகாஷ், மற்றொரு சுந்தர் ஆகியோர் சம்பந்தப்பட்டவர்கள்.  அந்த வழக்கு விசாரணை தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கார்த்திக் சேதுபதியை பழிவாங்க எதிர்கோஷ்டியினர் ராக்கெட் ராஜாவின் உதவியை நாடினர். அதன் பேரில் ராக்கெட் ராஜா சென்னையில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. தற்போது சென்னை போலீசில் சிக்கியுள்ள ராக்கெட் ராஜாவை முறைப்படி கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு நெல்லை போலீசில் ஒப்படைக்கவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.