துணிச்சல் சிறுவனை பாராட்டிய கமிஷனர் விஸ்வநாதன்

பதிவு செய்த நாள் : 20 ஏப்ரல் 2018 13:21

சென்னை

பெண் டாக்டரிடம் 10 பவுன் செயினை பறித்துச் சென்ற திருடனை 1 கிலோ மீட்டர் துாரம் விரட்டிச் சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்த துணிச்சல் சிறுவனை நேரில் அழைத்து கமிஷனர் விஸ்வநாதன் பாராட்டினார்.  

சென்னை, அண்ணாநகர் ‘டி’ பிளாக்கைச் சேர்ந்தவர் டாக்டர் அமுதா (50). ‘மின்ட்’ கிளினிக் என்ற பெயரில் அங்கு கிளினிக் நடத்தி வருகிறார். இவரது கிளினிக்கிற்கு நேற்று முன்தினம் இரவு இளைஞர் ஒருவர் வந்து, மருத்துவ ஆலோசனைகள் குறித்து கேட்டுள்ளார். அத்துடன் அமுதாவிடம், நீங்கள் குழந்தைகள் சிறப்பு மருத்துவரா, பெண்களுக்கான சிறப்பு மருத்துவரா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார். தனக்கு தெரிந்த பெண்ணுக்கு உடல் நலம் சரியில்லை, தற்போது அழைத்து வரலாமா? என்று கேட்டுள்ளார். இரவு கிளினிக்கை மூடும் நேரம் என்பதால், ஊழியர்கள் யாரும் இன்றி அமுதா மட்டும் தனியாக இருந்துள்ளார். இதை நோட்டமிட்ட அந்த இளைஞர், அங்கிருந்து சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து அந்த இளைஞர் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்து, தனியாக இருந்த அமுதாவை மிரட்டியுள்ளார். சத்தம் போட்டால் கொன்று விடுவேன் என்று கூறிவிட்டு, அமுதாவின் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்கச்சங்கிலியை அந்த இளைஞர் பறித்துக்கொண்டு ஓடியுள்ளார். திருடன், திருடன் என்று அமுதா அலற, சத்தம் கேட்டு எதிரே உள்ள கடை ஒன்றில் இருந்து சிறுவன் ஒருவன் ஓடிவந்துள்ளார். சூர்யா (17) என்ற அந்த சிறுவன், தனது சகோதரரின் கடைக்கு நேரம் கிடைக்கும் போது வந்து செல்வார். அதே போல தான் இந்த முறையும் வந்திருந்தார். சூர்யா ஓடி வந்து பார்த்தபோது, திருடன் சுவரை ஏறிக்குதித்து ஓடியுள்ளான். அதைக்கண்டதும் திருடன் யாராவது பிடியுங்கள் என்று கத்திக்கொண்டே, விரட்டத் தொடங்கியுள்ளார் சூர்யா.

சந்து, தெரு, சாலை என திருடனை விடாது விரட்டிச் சென்றுள்ளார். ஒரு கிலோ மீட்டர் துாரம் வரை இந்த விரட்டல் தொடர்ந்துள்ளது. ஓடும் வழி எங்கும் திருடன், திருடன் பிடியுங்கள் என்று கத்தியும் சிறுவனுக்கு, வேடிக்கை பார்த்த மக்கள் யாரும் உதவ முன்வரவில்லை. இறுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று, திருடனை பாய்ந்து பிடித்துள்ளார் சூர்யா. பிடித்தவுடன் திருடன் சூர்யாவை தாக்க முயன்றுள்ளான். ஆனால் கொஞ்சமும் பயப்படாத சூர்யா அவனை எதிர்த்துப் போராடி அவனை நிலைய குலைய வைத்தான். பின்னர் போலீசுக்கு தகவல் சொல்லி அவனைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தான். சம்பவ இடத்துக்கு வந்த அண்ணாநகர் போலீசார் திருடனிடமிருந்து 10 சவரன் சங்கிலியை மீட்டனர். அத்துடன் திருடனின் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

சங்கிலித் திருடனை சிறுவன் விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த தகவல் தெரியவந்ததும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அந்த சிறுவனை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்துப் பாராட்டினார். சிறுவனின் துணிச்சலை பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

இது குறித்து கமிஷனர் விஸ்வநாதன் கூறுகையில், ‘17 வயது நிரம்பிய சிறுவன் சூர்யா தனது உயிரை துச்சமாக மதித்து, பெண் டாக்டரிடம் செயின் பறித்துச் சென்ற திருடனை தனி நபராக  விரட்டிப்பிடித்து தாக்குதல் நடத்தி அவனை பிடித்துக் கொடுத்துள்ளார். சிறுவன் சூர்யா திருடனை விரட்டும் போது அங்குள்ள பொதுமக்கள் அதனை வேடிக்கை பார்த்துள்ளனர். யாரும் அவனுக்கு உதவ முன்வரவில்லை என்பது வேதனையான விஷயம். சிறுவன் சூர்யா போன்று பொதுமக்கள் அனைவரும் பொது இடத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் இது போன்ற திருடர்களை பிடிக்க பொதுமக்கள் மன உறுதியுடன் உதவ முன்வர வேண்டும்’’ என தெரிவித்தார்.

‘‘திருடனைப் பிடித்து மூக்கில் ஒரே குத்து.... கிர்ர்ர்ராகி கீழே விழுந்துட்டான்! – சூர்யா

துணிச்சல் சிறுவன் சூர்யா கூறுகையில், ‘‘எனது தந்தை நாராயணன் டெய்லர் கடை வைத்துள்ளார். அம்மா எல்லம்மா. மூத்த சகோதரி மாலதி (23) பொறியியல் கல்லுாரியில் 3ம் ஆண்டு படிக்கிறார். இளைய சகோதரி பிரியா தனியார் கல்லுாரியில் 3ம் ஆண்டு படிக்கிறார். எனக்கு படிப்பு ஏறாததால் 9ம் வகுப்போடு எனது படிப்பை நிறுத்தி விட்டேன். அண்ணாநகர் மேற்கு, திருமங்கலம், டிவி நகரில் குடும்பத்துடன் வசிக்கிறேன். ஏசி மெக்கானிக் கடையில் வேலை செய்து வருகிறேன். எப்போதாவது நேரம் கிடைக்கும் போது அண்ணா நகர் ‘டி’ பிளாக்கில் உள்ள எனது சகோதரரின் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைக்கு உதவிக்கு செல்வது வழக்கம். எதிரில்தான் டாக்டர் அமுதாவின் கிளினிக் உள்ளது. அதே போல கடந்த செவ்வாய்கிழமை இரவு 8.30 மணிக்கு வெளியில் நின்று கொண்டிருந்தேன். அப்போது டாக்டர் அமுதா கிளினிக்கில் இருந்து ஒருவன் வேகமாக வெளியில் ஓடி வந்தான். அவனைப் பின் தொடர்ந்து டாக்டர் அமுதா திருடன் திருடன் என அலறியபடி ஓடி வந்தார். அவரது கழுத்தில் ரத்தக்காயம் இருந்தது. சூழ்நிலையை உணர்ந்த நான் திருடனை விரட்டிச் சென்றேன். அவன் நான்கு கால் பாய்ச்சலில் வேகமாக ஓடினேன். விடாமல் விரட்டிச் சென்ற நான் அவனை பிடித்து அவனது மூக்கில் ஒரு குத்து விட்டேன். அதில் அவனுக்கு கிர்ர்ரரென ஆகி கீழே விழுந்து விட்டான். பின்னர் அவன் சட்டைப்பையில் இருந்த நகைகள் மற்றும் ரோட்டில் நழுவி விழுந்த துண்டு செயின் ஆகியவற்றை எடுத்துப் போய் டாக்டரிடம் கொண்டு போய் கொடுத்து விட்டு அவனை போலீசில் ஒப்படைத்தேன்.