ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்

பதிவு செய்த நாள் : 13 ஏப்ரல் 2018 19:21

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், கேஸ் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறி தூத்துக்குடி பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆலையை மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்திய மாணவர் சங்கத்தினர், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

ஆட்சியர் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முடியாதவாறு காவல்துறையினர் தடுப்புகளை அமைத்திருந்தனர்.  ஆனால், காவல்துறையினர் ஏற்படுத்தியிருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த இந்திய மாணவர் சங்கத்தினர் தரையில் அமர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாணவர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தியவண்ணம் உள்ளனர். நேற்று முன்தினம் நாசரேத் கலைக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இன்று தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

தடையை மீறி போராட்டம் நடத்தும் அரசியல் கட்சித் தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி துறைமுகத்தில் நேற்று சரக்கு லாரிகள் எதுவும் இயக்கப்படவில்லை. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு மூலப்பொருட்கள் ஏற்றிச்சென்ற லாரிகளை போராட்ட குழுவினர் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.