உங்கள் பிள்ளை மாநிலத்திலேயே முதல் மாணவனாக வர வேண்டுமா?: சைலேந்திரபாபு ஐபிஎஸ் பேட்டி

பதிவு செய்த நாள் : 13 ஏப்ரல் 2018 15:26

சென்னை

‘‘உங்கள் பிள்ளை மாநிலத்திலேயே முதல் மாணவனாக வர வேண்டுமா? என்ன செய்ய வேண்டும்’’: சொல்கிறார் டாக்டர் சி. சைலேந்திரபாபு, ஐபிஎஸ்., (தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி)'தூய்மை இந்தியா திட்டம்’ விழிப்புணர்வுக்காக காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சுமார் 4,500 கிலோ மீட்டர் அசகாய சைக்கிளில் பயண சாதனை... இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்ஜலசந்தி கடலை 12 மணி நேரம் நீந்தி மற்றொரு அரிய சாதனை... மாணவர்களுக்கு ஐஏஎஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி, சட்டம் – ஒழுங்கு காவல் பணியில், ஐந்து மாவட்ட ரவுடிகள் ஒழிப்பில் சிறப்பான பணித்திறன், 10க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இயற்றியது மற்றும் காணாமல் போன குழந்தைகள் பற்றிய ஆய்வு நடத்தி, ‘டாக்டர்’ பட்டம் – இத்தனை சாதனைகளுக்கு சொந்தக்காரர் வேறு யாருமல்ல, தமிழக ரயில்வே காவல்துறை கூடுதல் டிஜிபி டாக்டர் சி. சைலேந்திரபாபு, ஐபிஎஸ். குமரி மண்ணின் மைந்தர். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி விழாக்களில் நிச்சயம் இவரது ‘கலப்பு’ நிச்சயம் இருக்கும். எளிதில் போய் சென்றடையும் அளவுக்கு இவரது பேச்சால் பள்ளி மாணவர்களை கவர்ந்த ‘ரியல்’ கதாநாயகன்.

ஏடிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ்., ‘தினமலருக்கு’ அளித்த பிரத்யேக பேட்டி இதோ...   

‘‘உங்கள் பிள்ளைகளிடம் ‘நீ டாக்டராக வர வேண்டும், இன்ஜினியராக வர வேண்டும், கலெக்டர் ஆக வேண்டும்’ என்று வற்புறுத்துவதை விட, ‘நீ இந்த சமுதாயத்திற்கு என்ன செய்ய விரும்புகிறாய்?’’ என்ற கேள்வியை கேளுங்கள். நான் மக்களுக்கு நல்ல இயற்கை உணவு கிடைக்க பாடுபடுவேன் என்று உங்கள் பிள்ளை கூறினால், அவரை விவசாயப் படிப்பு படிக்க வையுங்கள். உலகிலேயே சிறந்த விமானம் தயாரிக்க வேண்டும் என்று சொன்னால் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிக்க வையுங்கள், அல்லது நாட்டுக்கு ஊழல் இல்லாத நல்ல நிர்வாகத்தை தரவேண்டும் என்று விரும்பினால் ஐஏஎஸ் படிக்க வையுங்கள். தயவு செய்து அவர்களுக்கு விருப்பமில்லாத விஷயத்தை திணிக்காதீர்கள். சில மாணவர்களுக்கு ஊசி, ஸ்டெதோஸ்கோப் என்றால் அலர்ஜி. அப்படிப்பட்ட பிள்ளைகளை மெடிசின் படி என்று வற்புறுத்தாதீர்கள். தமிழ் மீது ஆர்வம் இருந்தால் அவர்களை பிஏ, எம்ஏ என்று தமிழ் படிப்பு படிக்க வையுங்கள். அவர் சிறந்த தமிழ் பேராசிரியராகவோ, தலைசிறந்த தமிழ் கவிஞராகவோ வரவும் வாய்ப்புண்டு.

இவை எல்லாவற்றையும் தாண்டி உங்கள் பிள்ளைக்கு விளையாட்டில் ஆர்வம் திறமை இருந்தால் அதனை ஊக்கப்படுத்துங்கள். அதன் மூலம் அவர் பேட்மின்டன் சாய்னா போன்று உலக அளவில் புகழ் பெறலாம். அல்லது தேசிய கதாநாயகனாகவோ வரவும் வாய்ப்புள்ளது. அதனால் உங்கள் பிள்ளையின் விளையாட்டு திறமையை சாதாரணமாக எடை போடாதீர்கள். உங்கள் பிள்ளை பெண் பிள்ளையாக இருந்தாலும் அல்லது ஆண் பிள்ளையாக இருந்தாலும் சரி தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி அவசியம். அதிகாலையில் எழும் பழக்கத்தை கற்றுக் கொடுங்கள். உங்கள் மகனுடன் சேர்ந்து வாக்கிங் செல்லுங்கள். வாரம் ஒரு விளையாட்டை வைத்துக்கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்வதால், உங்கள் பிள்ளையின் மனம் உற்சாகம் பெறுவதோடு மூளை புத்துணர்ச்சி அடைந்து படிக்கும் திறனை அதிகரித்து, உங்கள் பிள்ளை முதல் மதிப்பெண் வாங்குவதற்கு சிறந்த படித்தளமாகவும் விளங்கும்.

முக்கியமாக, உங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தில் பேச, எழுத பழக்குங்கள். ஒரு நாளைக்கு ஒரு பக்கமாவது ஆங்கிலத்தில் கட்டுரை எழுத சொல்லுங்கள். அதற்கேற்ற ஆங்கில நாவல் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து படிக்க வையுங்கள். ஏனென்றால், அவர்கள் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றால் ஆங்கிலம் ஒன்றே கை கொடுக்கும். முடிந்த அளவு, உங்கள் பிள்ளைகளை ஹாஸ்டலில் தங்கிப் படிக்க வைப்பது அவர்கள் பணியை அவர்களே செய்வதற்கு அது ஏதுவாக இருக்கும். தினமும் ஆங்கில நாளிதழ்களை தவறாமல் படிக்க வையுங்கள். இது அவர்களுக்கு உலக அறிவை வளர்க்கும். என்றார்.

அடுத்ததாக பள்ளி மாணவர்கள் சார்பில் நாம் கேட்ட கேள்விகளுக்கு டக்டக்கென்று சளைக்காமல் பதில் சொன்னார் சைலேந்திரபாபு...

தேர்வில் அதிக மதிப்பெண் வாங்க ஐடியா சொல்லுங்களேன்?

பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் விடிய விடிய கண் விழித்து படித்து தேர்வை எழுதினாலும், முறையாக தேர்வுக்கு தங்களை தயார் செய்தவர்களே தாங்கள் எண்ணியவாறு மார்க்குகளை பெற முடியும். எந்த முறையில் படித்தால் அதிக பலன் கிடைக்குமோ, அம்முறையில் படித்தால் அது மாணவர்களின் படிப்பாற்றலை அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எந்த ஒரு பாடத்தில் நாம் அதிக ஆர்வத்தைக் காட்டுகிறோமோ அவை நமக்கு நன்கு புரியும். நீண்ட காலத்திற்கு நினைவிலும் நிற்கும் என்பதுதான் கல்வியின் அடிப்படைக் கோட்பாடு.

படித்த பாடங்கள் மறக்காமல் மனதில் பதிவதற்கு என்ன வழி?

வெறும் மனப்பாடம் செய்வதால் மட்டும் ஒரு வினாவிற்குரிய விடையை தேவையான விவரங்களுடன் எழுதிவிட முடியாது. சில படிப்பறிவு இல்லாத நபர்கள் அவர்கள் பார்த்த திரைப்படத்தில் உள்ள வசனத்தை அப்படியே மனப்பாடமாக சொல்வார்கள். அதற்கு காரணம், அவர்கள் திரைப்படத்தை அந்த அளவுக்கு பேரார்வத்துடன் பார்ப்பதே ஆகும். கிரிக்கெட் மீது ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்திய கிரிக்கெட் அணி மட்டுமல்ல. உலகிலுள்ள அனைத்து அணி வீரர்களையும் அவர்களது சாதனைகளையும் எப்படி நினைவில் வைத்துள்ளார்கள்? இது எப்படி சாத்தியம்? கிரிக்கெட் விளையாட்டின் மீது அவர்களுக்கு உள்ள அசாதாரணமான ஆர்வமே ஆகும். அதே போல மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடத்தின் மீது ஆர்வமும், ஆசையும் கொண்டால் அவற்றை படிப்பதே ஒரு நல்ல இன்ப உணர்வாகவும் உற்சாகமூட்டும் நிகழ்வாகவும் இருக்கும். பாடத்தில் சொல்லப்பட்ட செய்திகளும் புரியும். அவை உங்கள் மனதில் நிலைத்து நிற்கவும் செய்யும். எனவே, பாடங்களை நன்றாக புரிந்து கொண்டு முறையாக படிக்க வேண்டும்.

பள்ளிப் பாடங்களை எளிதில் புரிந்து கொள்வதற்கு டிப்ஸ் ஏதாவது கொடுங்களேன்....?

ஆசிரியர் பாடத்தை நடத்துவதற்கு முன்னதாக நீங்கள் ஒரு முறை அப்பாடத்தை வீட்டில் வைத்து படித்து விட்டு வகுப்பிற்கு செல்லுங்கள். அப்போது அதில் நமக்கு என்ன விஷயம் புரியவில்லை என்பது தெரிந்து விடும். இதனால் ஆசிரியர் பாடம் நடத்தும் போதே அந்த சந்தேகத்தை கேட்டு தெளிந்து கொள்ளலாம்.

நினைவாற்றலை அதிகப்படுத்திக் கொள்வது எப்படி?

ஒரு பாடத்தை மீண்டும் மீண்டும் படித்தலும், கேட்டலும், அதனை எழுதிப்பார்ப்பதும் நினைவாற்றலை அதிகரிக்கும். தினந்தோறும் செய்தித்தாளை படிப்பதாலும், வானொலி, தொலைக்காட்சி செய்திகளை கேட்பதாலும், பார்ப்பதாலும், நம் நாட்டின் பிரதமர் பெயரை எளிதில் நினைவில் வைத்துக் கொள்கிறோம். ஆனால் எப்போதோ ஒரு முறை படிப்பதால், கேட்பதால் வெளிநாட்டு பிரதமரின் பெயரை நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. அதிகப்படியான பாடங்களை குறுகிய காலத்தில் படிப்பதும், முன்பு ஒரு முறை படித்ததும் மறதிக்கு வழிவகுக்கும். புதிய செய்திகளை நினைவில் நிறுத்தும் போது பழைய செய்திகள் மறந்து விடுவதும் உண்டு. இதை ஆங்கிலத்தில் ‘loss of memory due to laps of time’ என்று குறிப்பிடுவார்கள்.

படித்த பாடங்களை நினைவில் நிலையாக நிறுத்துவது எப்படி?

அன்றைய தினம் படித்த பாடத்தை நினைவில் நிறுத்த நிச்சயம் revision செய்தல் வேண்டும். அந்த வாரத்தில் படித்ததை அந்த வார இறுதியில் கண்டிப்பாக ரிவிஷன் செய்ய வேண்டும். அதே போல அந்த மாதத்தில் படித்ததை மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் ரிவிஷன் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் எவ்வளவு காலத்திற்குப் பின்னரும் நினைவுக் கடலில் இருந்து தேவையான தகவல்களை கண நேரத்தில் வெளிக்கொணர முடியும். கஷ்டமான பாடங்களை சக மாணவ நண்பர்களுடன் சேர்ந்து விவாதிக்கும் போது அது பசுமரத்தாணி போல மனதில் பதிந்து விடும்.

அதிகாலை எழுந்து படிக்க முடியாத மாணவர்களுக்கு தங்களது அறிவுரை?

இரவில் சீக்கிரம் தூங்கினால் அதிகாலையில் சீக்கிரம் எழுந்திருக்கலாம். அதிகாலையில் படித்தால் மனதில் பதியும் என்பது பொதுவான நம்பிக்கை. அறிவியல் ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. இரவில் வெகுநேரம் கண்விழித்து படித்தவர்கள் தேர்வில் மிகுந்த மதிப்பெண் பெற்ற வெற்றிக் கதைகளும் உண்டு. அதிகாலையோ, நள்ளிரவோ எவ்வாறு படிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். அதற்காக அதிகாலை படிக்கும் வழக்கத்தை மாற்றக்கூடாது என்பது அர்த்தமல்ல.

பாடம் படிக்கும் போது தவிர்க்க கூடியவை என்னென்ன?

தனிமையில் இருந்து படிப்பது நல்லது. டிவியைப் பார்த்துக் கொண்டே படிப்பது, எழுதுவது சரியல்ல என்றுதான் நான் கூறுவேன். ஏனென்றால், நமது மூளை ஒரு நேரம் ஒரு வேலையை மட்டும்தான் செய்ய முடியும். டிவி பார்த்துக் கொண்டே படிப்பதால் படிப்பு நம் மனதில் பதியாது. தொலைக்காட்சியில் பார்க்கும் நிகழ்ச்சிதான் பதிவாகும். பிறகு என்ன படித்தோம் என்பதே நினைவில் நிற்காது. சக்தி வாய்ந்த நினைவாற்றலுக்கு நமது கவனத்தை ஒருமுகப்படுத்துவதுதால் கவனச்சிதறல் இல்லாமல் எதைப் பார்த்தாலும் எதைக் கேட்டாலும்  அப்படியே நினைவில் பதியும்.

                                                                                                                                                                 – அமீர் ஹம்ஸா.