தூத்துக்குடியில் தனியார் ஆலையை மூட வலியுறுத்தி கடைகள் அடைப்பு

பதிவு செய்த நாள் : 24 மார்ச் 2018 21:00

தூத்துக்குடி,

 தூத்துக்குடியில் தனியார் ஆலையை மூட வலியுறுத்தி நேற்று முழு அளவில் கடையடைப்பு நடந்தது. டீக்கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்தும் முழுமையாக மூடப்பட்டு வியாபாரிகள் எதிர்ப்பினை தெரிவித்தனர். மாலையில் நடந்த கண்டன கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள்  கலந்துகொண்டனர்.

 தூத்துக்குடியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு கருத்து கேட்பு கூட்டங்கள் நடந்தது. இந்த விரிவாக்கம் சம்பந்தமான செய்தி வெளியாக துவங்கியதுமே ஏற்கனவே இந்த தனியார் தொழிற்சாலைக்கு எதிராக செயல்பட்ட சிலர் கூடி ஆலோசித்தனர். அவர்கள் தனியார் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என்று வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து இந்த விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட குமரெட்டியாபுரம் கிராம மக்களை சந்தித்து அவர்களை தங்களுடன் எதிர்ப்புக்கு ஆயத்தப்படுத்தினர். இதனை தொடர்ந்து அந்த கிராம மக்களை பள்ளி குழந்தைகளுடன் உண்ணாவிரதம் இருந்தனர். இதற்கிடையில் குமரெட்டியாபுரம் கிராமத்தில் உள்ளவர்களுக்கு தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந் நிலையில் தனியார் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். விரிவாக்கத்திற்கு அனுமதியளிக்க கூடாது என்பதை வலியுறுத்தி போராட்டத்திற்கு எதிர்ப்பாளர்கள் சிலர் கடந்த ஒரு மாதமாக திட்டமிட்டனர். முதல் கட்டமாக ஆலையை மூட வலியுறுத்தி வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினர். அதனை தொடர்ந்து பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள், வணிகர் சங்கங்களை சந்தித்து ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரினர்.

இதற்கு  தூத்துக்குடி நகர மத்திய வியாபாரிகள் சங்கத்தினர் ஆதரவு அளித்தனர். இதனை தொடர்ந்து வியாபாரிகள் ஆதரவு குறித்த விளம்பரங்கள் செய்யப்பட்டது. பல்வேறு இடங்களில் போஸ்டர்கள், நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு கடையடைப்புக்கும், பொதுக்கூட்டத்திற்கும் ஆதரவு தருமாறு வேண்டப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று  தூத்துக்குடியில் முழு கடையடைப்பு நடந்தது. ௩ம் மைல் முதல் பீச் ரோடு வரை கடைகள் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. கடையடைப்பு காரணமாக திடீர் கடைகள் தோன்றி தம் டீ, வடை விற்பனை நடந்தது. காமராஜ் பெரிய காய்கறி மார்கெட்டை சுற்றியுள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. ஆனால் மார்கெட்டின் கேட் அடைக்கப்பட்டு அதில் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து போர்டு தொங்க விடப்பட்டிருந்தது. ஆனால் உள்ளே காய்கறி கடைகளில் விற்பனை வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது. நேற்று முழுகடையடைப்பு காரணமாக ரோடுகளிலும் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. இதனால் டிராபிக் நெருக்கடி எதுவும் இல்லாமல் போக்குவரத்து சீராக இயங்கியது.

கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து நேற்று நாட்டுப்படகுகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன. சுமார் ௮௦ சதவீதம் நாட்டுப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அதே சமயம் விசைப்படகுகள் வழக்கம் போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றது.

நேற்று மாலை வி.வி.டி., சிக்னல் அருகே தனியார் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து வேன்களில் ஆட்களை ஏற்றி வந்தனர். இதில் எதிர்ப்பாளர்கள், வியாபாரிகள் சங்கத்தினர் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  தூத்துக்குடி வீராங்கனை அமைப்பு பாத்திமா பாபு, மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் விநாயக மூர்த்தி உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலானோர் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.

கூட்டத்தில் பேசியவர்கள் தனியார் தொழிற்சாலைக்கு எதிராக முழக்கமிட்டு தொழிற்சாலையை மூடும் வரை ஓயமாட்டோம் என்று ஆவேசமாக பேசினர்.