பெயிண்டர் வெறிச்செயல்: போலீஸ் நிலையத்தில் எஸ்ஐக்கு கத்திக்குத்து

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2018 01:18


சென்னை:

சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் தனக்கு சாதகமாக வழக்கு விசாரணை நடத்தாததால் எஸ்ஐக்கு கத்திக்குத்து விழுந்தது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை, அயனாவரம், ராமநாதன் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நேற்று மதியம் அயனாவரம் போலீஸ் நிலையத்துக்கு வந்த ஆனந்தன் சட்டம் ஒழுங்கு எஸ்ஐ சுப்பிரமணியை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். ‘‘அயனாவரம் பி.ஏ கோயில் தெருவைச் சேர்ந்த பெயிண்டர் வேலை பார்த்து வரும் சையது முனாப் என்பவர் அடிக்கடி என்னை தகாத வார்த்தைகளால் பேசுகிறார். அவரது மனைவியுடன் என்னை சேர்த்து வைத்து தவறாகப் பேசி வருகிறார். எனக்கும் சையது முனாப் மனைவிக்கும் எந்தவித தவறான நட்பும் இல்லை. மேலும், என்னை சையது முனாப் அடிக்கடி கொலை செய்துவிடுவதாக மிரட்டிவருகிறார்' என அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

இதனையடுத்து எஸ்ஐ சுப்பிரமணி சையத்முனாப்பை விசாரணைக்கு ஆஜராகும்படி அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து சையது முனாப், போலீஸ் நிலையத்துக்கு வந்தார். இருவரிடமும் எஸ்ஐ சுப்பிரமணி விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது சையது முனாப், தான் இடுப்பில்  மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆனந்தனைக் குத்த முயன்றார். இதில் அவரது கழுத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த எஸ்ஐ சுப்பிரமணி முனாப்பிடமிருந்து கத்தியை பிடுங்க முயன்றார். அப்போது நடந்த தள்ளுமுள்ளில் சுப்பிரமணியின் கைகளில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுப்பிரமணியின் அலறல் சத்தம் கேட்டு போலீஸ் நிலையத்திலிருந்த மற்ற  போலீஸார் ஓடி வந்தனர். இதனைக் கண்ட சையது முனாப் போலீஸ் நிலையத்திலிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை போலீஸார் மடக்கிப்பிடித்தனர்.

 கத்திக்குத்தால் காயமடைந்த சுப்பிரமணி, ஆனந்தனுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. முனாப் கத்தியால் வெட்டியதில் எஸ்ஐ சுப்பிரமணிக்கு கையில் 8 தையல்கள் போடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக எஸ்ஐ சுப்பிரமணி அளித்த புகாரின் பேரில் சையத் முனாப் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.