சங்கரநாராயண சுவாமி கோயிலில் சூரிய ஒளி விழும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2018 01:07


சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் நேற்று லிங்கத்தின் மீது சூரிய ஔி விழும் அரிய நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் தட்சிணாயணம் மற்றும் உத்திராயணம் காலங்களை முன்னிட்டு மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 21,22,23 ஆகிய மூன்று நாட்கள் சூரிய ஔி கர்ப்பகிரத்தில் உள்ள லிங்கத்தின் மீது விழும் அரிய நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் சூரிய பகவான் லிங்கத்தை பூஜித்ததாக நம்பப்படுகிறது. நேற்று மார்ச் 21ம் தேதியை முன்னிட்டு காலை 6.20 மணிக்கு லிங்கத்தின் மீது சூரிய ஔி விழும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சங்கரலிங்கசுவாமி சன்னதியில் உள்ள மின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு லிங்கத்திற்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து சங்கரலிங்கசுவாமி சன்னதியில் உள்ள சூரிய பகவான் கோயிலிலும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்த அரிய காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

இன்றும்(22ம் தேதி), நாளையும் லிங்கத்தின் மீது சூரிய ஔி விழ இருப்பதால் சூரிய பூஜை நடக்க இருக்கிறது.